ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் கூகுள் அலுவலகம்- அரசு ஒப்புதல்!

8 ஆனி 2025 ஞாயிறு 16:35 | பார்வைகள் : 1086
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியில், 143 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான புதிய அலுவலக வளாகத்தை கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளது.
இந்த அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய அலுவலகம் அனந்தவரம்-நெக்கள்ளு சாலையில், இ-8 சாலையில் உள்ள சர்வே எண்கள் 10, 11, 12 மற்றும் 13 ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பில் அமைய உள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பை தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுளுக்கு ஆந்திரப் பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில், கூகுள் நிறுவன அதிகாரிகள், ஆந்திரப் பிரதேச அரசு பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து ஒப்பந்தத்தை இறுதி செய்தனர்.
அப்போது, நிலத்தை கையகப்படுத்துவதற்கு தங்கள் ஒப்புதலையும் தெரிவித்தனர். விமான நிலையம் மற்றும் ரயில் நிலைய வசதிகள் அமையவிருக்கும் இடத்திற்கு அருகாமையில் இந்த நிலம் அமைந்துள்ளதால், ஆந்திர அரசு வழங்கிய இடத்தை கூகுள் நிறுவனம் உடனடியாக ஏற்றுக்கொண்டது.
புதிய கூகுள் வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வளர்ச்சி அப்பகுதிக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.