Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

தாத்தா கட்டிய வீடு

தாத்தா கட்டிய வீடு

18 ஆடி 2023 செவ்வாய் 09:42| பார்வைகள் : 5733


நாற்சார வீடு
நாலு பக்கமும் அறைகள்
முன்னும் பின்னும் தாழ்வாரம்
நடுவில் ஒரு முற்றம்.
 
முற்றத்தில் நின்றால்
தெரியும் வானம்.
வானத்தில்......காலையில்
தெரிவது பறவைகள்
மாலையில் தெரிவது
வர்ண வர்ண ஓவியங்கள்.
 
வானத்தில் முழு நிலவு ......
முற்றம் எல்லாம் வெளிச்சம்
இரவெல்லாம் தாயம் பல்லாங்குழி......விளையாட்டு
அடுத்த நாள் பள்ளி இல்லை
அது நிச்சயம்.
 
மழை காலம்........
முற்றம் ஒரு குளம்
காகிதத்தில் கப்பல் செய்து அண்ணனும் நானும்
விளையாடுவோம்.
 
முற்றத்து தாழ்வாரம்.....
அதுவே எங்கள் படுக்கை,
வானத்து நட்சத்திரங்கள்
கண் சிமிட்டி கதை சொல்லும்.
 
அண்ணனும் கதை சொல்வான்!
அதில் பல பொய்கள்
கலந்திருக்கும் - அதில் ஒன்று
அர்ச்சுனன் போல்
ஒற்றைக் காலில் நின்று
ஆயிரம் வருடம்
தவம் செய்தால் நானும்
நட்சத்திரம் ஆகலாம் என்பான்.
 
அது உனக்கு எப்படி
தெரியும் என்பேன்,
அடி வேணுமோ
பேசாமல் தூங்கு என்பான்,
நானும் சிரித்தபடி
அதை கேட்டு தூங்கிடுவேன்.