Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

மாறி வரும் காலநிலை ; மனிதரை தேடி வரும் அழிவுகள் !

மாறி வரும் காலநிலை ; மனிதரை தேடி வரும் அழிவுகள் !

3 ஆவணி 2023 வியாழன் 09:08| பார்வைகள் : 1414


x* வெப்பம் தொடர்பான நோயால் ஐரோப்பாவில் 61,672 பேர் உயிரிழப்பு !

* பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, போலந்து பாரிய  வெப்ப அலையில் மூழ்கின!

*கடந்த மாதம் வெப்பமான மாதமாக உலகளாவிய ரீதியில் கணிக்கப்பட்டது !

நாம் காடுகளுக்குள் விலங்குகளைத் தேடிச் சென்ற காலம் மாறி இன்று, மனிதர்களை தேடி விலங்குகள் வீதிகளுக்கு வருவதும், உதவி கேட்பதும் தொடர்கதையாக உள்ளது. இந்த விசித்திரமான நிலைமைக்கு நாமே காரணம் என்ற உண்மையையும் மறந்து போகக்  கூடாது.

காடுகள் எரிக்கப்படுவதும், வறட்சியால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலங்குகள் மரணத்தின் விளிம்பில் காணப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

அதுவே, அவை  இன்று மக்களை தேடி படையெடுக்கின்றன. மறுபுறம் அது மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் மாறிவருகின்றது.

குறிப்பாக அவுஸ்திரேலியாவின் காடுகளில் ஏற்பட்ட சுயதகனம் காரணமாக பெருமளவு விலங்குகள் தண்ணீர் கேட்டு வீதிகளுக்கு  ஓடிவந்ததுடன், அவை பழக்கப்பட்டவை போன்று மக்களை தட்டிக்கக்கேட்டு  நீர் பருகியமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அவுஸ்திரேலியாவில் கடுமையான வெப்பத்தின் போது தாகத்துடன் இருந்த  கோலா கரடிக்கு சைக்கிள் ஓட்டுபவர் தண்ணீர் கொடுக்கிறார். (2019)

காலநிலை மாற்றம் என்றால் என்ன ?

காலநிலை மாற்றம் உலகின் பாரிய நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும்  காரணமாகி விட்ட நிலையில் இன்று அனைவரது கவனமும் அதன் பால் ஈர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம். காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு போன்ற சராசரி நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தையே  குறிக்கின்றது. இந்த மாறுபாடு காரணமாக  நீண்ட காலத்தில் பூமியின் மேற்பரப்பு வெப்பமடைந்து வருவதை நாசா விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். மேலும், கடந்த 20 ஆண்டுகளில் பல தடைவைகள் வெப்பக் காற்றுகள் உமிழ்ந்து தள்ளியுள்ளன. மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற மனித நடவடிக்கைகள், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் எந்த சந்தர்ப்பத்திலும்  இல்லாத அளவுக்கு வேகமாக உலகை கொதி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

காலநிலை மாற்றம் என்னும் போது முக்கியமாக வெப்பமான சூழ்நிலை என்று மட்டுமே மக்கள் பலரும்  நினைக்கிறார்கள். ஆனால் வெப்பநிலை உயர்வு என்பது காலநிலை தொடர்பான கதையின் ஆரம்பம் மட்டுமே. பூமி ஒரு அமைப்பு என்பதால், அதில், ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் உலகின் சகல  பகுதிகளிலும்  மாற்றங்களையும்  பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

இந்த காலநிலை மாற்றத்தின் விளைவாக, கடுமையான வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, கடல் மட்ட உயர்வு, வெள்ளப்பெருக்கு, துருவப் பனி உருகுதல், பேரழிவு புயல்கள் மற்றும் உணவு தட்டுப்பாடு என்பன தொடர்கதையாக உள்ளது.  

வெள்ளப்பெருக்கு மக்களையும், அவர்களது உடைமைகளையும் இழுத்து சென்றது. கடும் புயல் பாரிய சேதங்களை ஏற்படுத்தி  அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது.

இதனிடையே, கடந்த ஜூலை மாதம் உலகின் கொதிநிலையான  மாதம்  என்று பரவலாக கருதப்பட்டது. இந்நிலையில்,  கடந்த ஆண்டு ஐரோப்பாவின் வெப்பமான கோடை காலத்தில் 62,000 க்கும் அதிகமானோர் வெப்பம் காரணமான நோய்களால் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, புதிய ஆய்வுகள்  வெப்பம் ஓர்  "அமைதியான உயிர்கொல்லி " என்று கண்டறியப்பட்டுள்ளது,

மேலும் "நேச்சர் மெடிசின்" என்ற  இதழ் மேற்கொண்ட  ஆய்வில், கடந்த ஆண்டு மே 30 முதல் செப்டம்பர் 4 வரையான கால பகுதியில் வெப்பம் தொடர்பான நோயால் ஐரோப்பாவில் 61,672 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 8,000 க்கும் அதிகமான  வயதானவர்களும் குறிப்பாக அதிகளவு  பெண்களுக்கும் வெப்பத்தால் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளனர்  என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குறித்த இதழில், இத்தாலி மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இனம் காணப்பட்டதுடன், அங்கு  சுமார் 18,000 இறப்புகளும், ஸ்பெயினில் 11,000 க்கும் அதிகமான இறப்புகளும் மற்றும் ஜேர்மனியில் 8,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்த 62,000 இறப்புகளில், வெப்பம் தொடர்பான இறப்பு விகிதம் ஆண்களை விட பெண்கள்  63 வீதமாக இருப்பதுடன், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின்  இறப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளமையும் அவதானிக்கப்பட்டது.

அதேவேளை, வெப்பம் தொடர்பான நோய்களுக்கு  வயது  முதிர்வு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.    அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளின்படி,வருடாந்தம் சுமார் 700 பேர் வெப்பம் தொடர்பான நோய்கள் காரணமாக  இறக்கின்றனர் என ஹவார்ட்  பல்கலைக்கழகத்தின் மருத்துவரும் வரலாற்றாசிரியர்களில் ஒருவருமான  டேவிட் எஸ்.ஜோன்ஸ் கூறுகிறார்.  அதேவேளை, அமெரிக்கா  தரவுகளை குறைத்து கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், ஆய்வின் கண்டுபிடிப்புகள், ஐரோப்பாவின் தற்போதைய வெப்ப தடுப்புத் திட்டங்கள் என்பன ஆபத்தான வெப்ப அலைகளால் ஏற்படும் அதிகமான உயிர் ஆபத்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த  போதுமானதாக இல்லை என  சுட்டிக்காட்டுகிறது.

மேலும், பயனுள்ள திட்டங்கள் இல்லாமல் போனால் ஐரோப்பாவில்  2030 க்குள் ஒவ்வொரு கோடைகாலத்திலும் 68,000 க்கும் மேற்பட்ட அகால மரணங்களை சந்திக்க நேரிடும் என்றும்  எச்சரிக்கப்படுகிறது. எனவே புவி வெப்பமயமாதலை தடுக்க  கணிசமான திட்டங்களின்  அவசரத் தேவையையும் சுட்டிக்காட்டுவதாக இது அமைகின்றது.

உலகளாவிய ரீதியில் 20 ஆம் நூற்றாண்டில் கவனிக்கப்பட்ட மாற்றங்களான காற்று மற்றும் கடல் வெப்பநிலை அதிகரிப்பு,  கடல் மட்ட உயர்வு, பனி, வளிமண்டலம் மற்றும் கடல் சுழற்சி மற்றும் பிராந்திய வானிலை முறைகளில் மாற்றங்கள் ஆகியவை பருவகால மழையை பாதிக்கின்றன.

வளிமண்டலத்தில் பச்சைவீட்டு தாக்கங்கள்  இணைவதால் காலநிலை அமைப்பில் ஏற்படும் கூடுதல் வெப்பத்தால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.  இயற்கை எரிவாயு,  காடழிப்பு, விவசாயம் மற்றும் நில பயன்பாட்டு மாற்றங்கள் போன்ற மனித நடவடிக்கைகளால் அவை ஏற்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் பச்சைவீட்டு   வாயுக்களின் அளவை அதிகரிக்கின்றன.

ஒரு சில மணிநேரங்களில் வானிலை மாறலாம் என்றாலும், நீண்ட கால இடைவெளியில் காலநிலை மாறுகிறது. காலநிலை மாற்றம் என்பது  சராசரி வானிலை நிலைகளின் குறிப்பிடத்தக்க மாறுபாடு ஆகும். காலநிலை மாற்றம் என்னும் போது  இயற்கையான வானிலை மாறுபாட்டிலிருந்து தோன்றும்  நீண்ட கால போக்காகும். இதனை நாம்  இன்று அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, விஞ்ஞானிகளின்  கூற்றை அடுத்து கடந்த   ஜூலை மாதம் முன்னைய  வெப்ப அளவுகோல்களை விடவும்  உயர்வாக அமைந்தது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.

வெப்பமான காலநிலை  இந்த உலகின் பல்வேறு  பகுதிகளை பாதித்துள்ளது. பாலைவனத்தில் இரவு நேரம் பொதுவாக குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், இன்று நிலைமை அவ்வாறில்லை. அதேவேளையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெத் வேலி எனப்படும் 3,000  சதுர மைல் பரப்பைக் கொண்ட  பாலைவனப் பகுதி இந்த மாதம் உலகளவில் இதுவரை இல்லாத  வெப்பமான இரவைக் கண்டது.

மேலும், வெப்பம் காரணமாக கனேடிய காட்டுத்தீ முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் எரிந்ததுதுடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகள்  ஒரு பெரிய வெப்ப அலையில் மூழ்கின. இத்தாலிய தீவான சிசிலியின் ஒரு பகுதி தீயில் மூழ்கியது. புளோரிடாவில் இருந்து அவுஸ்திரேலியா வரையிலான கடற்கரையோரங்களில் கடல் வெப்ப அலைகள் விரிவடைந்தன. இது பவளப்பாறைகள் இறப்பது பற்றிய கவலையை அதிகரித்ததுள்ளது.

பூமியின் குளிர்ந்த இடங்களில் ஒன்றான  அந்தாட்டிக்கா கூட இன்று வெப்பத்தை உணர்கிறது. தெற்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் கடல் பனி தற்போது மிகக் குறைந்த அளவில் உள்ளதாக  கூறப்படுகின்றது. இதற்கிடையில், வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தென் கொரியா, ஜப்பான், இந்தியா மற்றும் பாகிஸ்தானை வெள்ளத்தில் மூழ்கடித்தது. ஆனாலும், கடந்த மாதம் வெப்பமான மாதமாகவே உலகளாவிய ரீதியில் கணிக்கப்பட்டது.

காலநிலை குறித்த  நடவடிக்கை

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் அண்மையில் கருத்து வெளியிட்ட  ஐ.நா பொதுச் செயலாளர், “நாடுகளின்  தலைவர்கள்  காலநிலை நடவடிக்கை மற்றும் காலநிலை நீதிக்காக  தமது பங்களிப்பை நல்க வேண்டும்", குறிப்பாக ஜி 20 முன்னணி தொழில்துறை நாடுகளைச் சேர்ந்தவர்கள், உலகளாவிய ரீதியில் 80 சதவீத  கார்பன் வாயு வெளியேற்றத்துக்கு  பொறுப்பானவர்களாக  உள்ளனர் என்றார்.

மேலும், காலநிலையை ஒட்டிய இரு உச்சி மாநாடுகள்  விரைவில் நடைபெறவுள்ளன. செப்டம்பரில் ஐ.நா காலநிலை உச்சி மாநாடும், நவம்பரில் துபாயில் நடக்கும் கோப் 28 காலநிலை உச்சிமாநாடும்  முக்கியமானவையாகும்  என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜி 20 உறுப்பினர்கள் காபன் வெளியேற்றத்துக்கு எதிராக எடுக்க வேண்டிய  இலக்குகளின் அவசியத்தை குட்டெரெஸ் எடுத்துரைத்தார். அத்தோடு, நூற்றாண்டின் நடுப்பகுதியில்  காபன் வெளியேற்றத்தை  முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ஈடான மற்றும் சமாந்தரமான  மாற்றத்தை விரைவுபடுத்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அதேநேரத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு விரிவாக்கத்தை நிறுத்தி நிலக்கரியை 2040 க்குள் படிப்படியாக முற்றாக கைவிட   வேண்டும் என்றும்  அவர் கேட்டுக் கொண்டார்.

2027 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் சூழல் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் ஐ.நா செயல் திட்டத்தை செயல்படுத்தவும் அதன் உறுதிமொழியை மதிக்கவும் முன் வர  வேண்டும். அதேவேளை, வளர்ந்து வரும்  நாடுகளில் காலநிலைக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் பசுமை காலநிலை நிதியான  100 பில்லியன் டொலர்களை முழுமையாக வழங்குவதற்கும்   செல்வந்த நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டும்  என்றும்  அவர் கேட்டுக் கொண்டார்.

உலகம் வெப்பமாவதால் உருவாகும் தீமைகளை நாம் மட்டுமல்ல நமது சந்ததியினரே சுமக்க வேண்டிருக்கும். உலகின் மொத்த நிலப்பரப்பில் 31 சதவீதம் காடுகளாகும். இவையே பூமிக்கு போர்வையாக இருந்து எம்மை பாதுகாக்கிறது. இதன் அடிப்படையில் உலகில் மிதமான வெப்ப மண்டல காடுகள் மற்றும் வெப்பமண்டல காடுகள்  என வகைப்படுத்தப்பட்டுள்ளன. காடுகளே பூமியின்" சிறுநீரகமாக " இருந்து  அனைத்து உயிரையும் காக்கின்றது.

எனினும், காலநிலை மாற்றங்கள் காரணமாக காடுகள் பாரிய  அழிவுகளை சந்தித்து வருகின்றன. மேலும், காபனீரொட்சைட்டை  உறிஞ்சி ஒட்சிசனை வெளியேற்றும்  மழைக்காடுகளை  "பூமியின் நுரையீரல் "  என்று அழைப்பார்கள். ஆனாலும் இவை சட்ட விரோதமான செயற்பாடுகளால் மோசமாக  அழிக்கப்பட்டு வருகின்றன.

உலகில் ஐரோப்பா , அந்தாட்டிக்கா கண்டங்களைத்தவிர ஆசியா , ஆபிரிக்கா , வட  அமெரிக்கா , தென் அமெரிக்கா,  அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காடுகள் பறந்து காணப்படுகின்றன. இருந்தும் கூட சட்ட விரோதமாகவும்,  வேடிக்கையாக  தீ மூட்டியும் காடுகள் அழிக்கப்படுகின்றன.

இதில்  இலங்கையில் (வில்பத்து), இந்தியா  (வடகிழக்கு) ஆகிய நாடுகளும் விதிவிலக்கல்ல.  நம்மை பாதுகாக்கும் காடுகளை , நாமே  அழிக்க  முற்பட்டால் இறுதியில் நமக்கே அது  பாதகமாக மாறிவிடும் என்பதை நாம்  ஒருபோதும் மறந்து போக கூடாது. அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே அதில் நாம் வெற்றி காண்பதுடன் உலகம் வெப்பமயமாதலை  தடுக்க முடியும்.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்