Paristamil Navigation Paristamil advert login

நக்சல் தீவிரவாதத்தில் இருந்து நாடு விடுபடும் நாள்... வெகு தொலைவில் இல்லை!: பிரதமர் நரேந்திர மோடி

நக்சல் தீவிரவாதத்தில் இருந்து நாடு விடுபடும் நாள்... வெகு தொலைவில் இல்லை!: பிரதமர் நரேந்திர மோடி

2 கார்த்திகை 2025 ஞாயிறு 08:17 | பார்வைகள் : 145


பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின், கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில், நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை, 125ல் இருந்து 11 ஆக குறைந்துள்ளது. நக்சல் அச்சுறுத்தலில் இருந்து, நாடு விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படத் தெரிவித்தார். சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம் உருவாகி, 25வது ஆண்டுகள் நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், தலைநகர் ராய்ப்பூரில் உள்ள நவ ராய்ப்பூரில் நேற்று விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் விஷ்ணு தியோ சாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சத்தீஸ்கரில் சாலை, தொழில், சுகாதாரம், எரிசக்தி போன்ற துறைகளில், 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது:

சத்தீஸ்கர் மக்கள், 50 ஆண்டுகளாக நக்சல் தீவிரவாதத்தால் பெரும் துயரத்தை அனுபவித்தனர். பா.ஜ., அரசின் அதிரடி நடவடிக்கைகளால், நக்சல் பிடியில் இருந்து தற்போது அம்மாநிலம் விடுபட்டுள்ளது, மனநிறைவை அளிக்கிறது.

அரசியலமைப்பை காட்டி, சமூக நீதி என்ற பெயரில் முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள், தங்களின் சுயநலனுக்காக சத்தீஸ்கர் மக்களுக்கு அநீதி இழைத்தனர். நக்சல் சித்தாந்தத்தால் பழங்குடி பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை.

சத்தீஸ்கரில் பல ஆண்டுகளாக, பழங்குடி கிராமங்களில் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் இல்லை. இருந்தவையும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டன. டாக்டர்கள், ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்., தலைவர்கள், 'ஏசி' அலுவலகங்களில் சுகமாக உட்கார்ந்து, சத்தீஸ்கர் மக்களை கைவிட்டு விட்டனர். பழங்குடி சகோதர, சகோதரியர் வன்முறையால் பாதிக்கப்படுவதை பார்த்து, என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

தங்கள் குழந்தைகளுக்காக அம்மக்கள் அழுவதை பார்த்து, என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 2014-ல் ஆட்சிக்கு வந்த நாங்கள், நக்சல் தீவிரவாதத்தில் இருந்து நாட்டை விடுவிக்க உறுதியேற்றோம். தற்போது அதை செய்து காட்டி உள்ளோம்.

பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன், நாட்டில் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை, 125ஆக இருந்தது. தற்போது அது மூன்றாக குறைந்துள்ளது. சத்தீஸ்கர் உட்பட ஒட்டு மொத்த நாடும், நக்சல் பிடியில் இருந்து விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கடந்த சில மாதங்களில், நம் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பயந்து, நுாற்றுக்கணக்கான நக்சல்கள், ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். இது வெறும் துவக்கம் தான்.

பிஜாப்பூரின் சிகாபள்ளி கிராமத்தில், 70 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக மின்சாரம் வந்துள்ளது. அபுஜ்மாத் பகுதியில் உள்ள ரேகவாயா கிராமத்தில், முதன்முறையாக பள்ளி திறக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தீவிரவாத மையமாக அறியப்பட்ட புவார்த்தி கிராமத்தில், தற்போது வளர்ச்சி பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

நக்சல்களின் சிவப்பு கொடி பறந்த இடத்தில், தற்போது நம் தேசியக் கொடி கம்பீரமாக பறக்கிறது. 25 ஆண்டுகளாக நக்சல் அச்சுறுத்தல் இருந்த போதும், சத்தீஸ்கர் முன்னேறி வந்தது. தற்போது, நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்ததன் மூலம், வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்