காட்டிலிருந்து சிங்கம் ஒன்று ஒரு கிராமத்திற்குள் புகுந்து விட்டது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பயத்தில் இருந்தனர்.
அப்போது அக்கிராமத்தில் இருந்த தைரியசாலி ஒருவன், ஒரு இரும்பு கூண்டை தயார் செய்து, அதனுள் ஒரு ஆட்டை கட்டி கிராம எல்லையில் வைத்திருந்தான்.
அன்று மதியம் வந்த சிங்கம் ஆட்டை உண்ண எண்ணி கூண்டுக்குள் அது போக கூண்டு உடனே மூடிக் கொண்டது.
சிங்கம் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டதால் இப்போது அதன் எண்ணம் ஆட்டின் மீது செல்லாமல் தான் தப்பிக்கும் வழியை நாடியது.
கூண்டைப் பற்றி முன்னரே அறிந்திருந்த ஆடு சிங்கத்திடம், “சிங்கமே! உன்னை நான் காப்பாற்றுகிறேன் ஆனால் நீ வெளியே வந்ததும் என்னைக் கொல்லக்கூடாது” என்றது. சிங்கமும் அவ்வாறே உறுதி அளித்தது. கட்டியிருந்த ஆட்டை விடுவித்தது.
ஆடு தாவித்தாவி கூண்டின் கதவைத்திறந்தது சிங்கமும், ஆடும் வெளியே வந்தன.
உடனே சிங்கம் ஆட்டைக் கொல்லப்பார்த்தது. ஆடோ! “உன்னை நான் காப்பாற்றினேன் அதற்காக நீ அளித்த உறுதி மொழியை மீறலாமா?” என்றது.
“அப்போது என் உயிர் முக்கியம்… இப்போது என் உணவு முக்கியம்”, என்றது சிங்கம்.
அப்போது அந்த வழியே வந்த நரியைப் பார்த்து ஆடு “நரியிடம் நீதி கேட்கலாமா?”, என்றது. சிங்கமும் ஒப்புக்கொண்டது.
நடந்த நிகழ்வுகளை நரி பொறுமையாக கேட்டது. பின்னர் நீங்கள் சொல்வது சரிவர விளங்கவில்லை… முதலில் சிங்கம் கூண்டில் எந்நிலையில் இருந்தது? என்றது.
சிங்கமும் கூண்டுக்குள் சென்று “இந்நிலையில் தான்” என்றது.
மின்னல் வேகத்தில் நரி கூண்டின் கதவை மூடியது. பின்னர் ஆட்டைப் பார்த்து “உன்னை உண்ணும் சிங்கத்திற்கு உதவலாமா?”, என்றது.
சிங்கமும் தான் செய்த தவறுக்கு வருந்தியது.
ஆடு நரிக்கு நன்றி சொல்லிவிட்டு விரைந்தது.
நீதி: உதவி செய்வது நல்லது. ஆனால் உதவும் முன் யோசித்து அதற்கேற்ப உதவவேண்டும்.