20 February, 2021, Sat 3:50 | views: 685
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கடையநல்லூரில் பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
மத்திய அரசு, கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கடந்த 25.03.2020 அன்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் - 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் - 1937 ஆகிய சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
கைவிடப்படுகிறது
இதனையடுத்து காவல்துறையினர், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு சோதனைச்சாவடிகள் அமைத்தும், வாகன தணிக்கை செய்தும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கொரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர் மீது சட்டப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
குடியுரிமை சட்ட திருத்தம்
மத்திய அரசு, 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், குடியுரிமை திருத்த மசோதா - 2019 ஐ கடந்த 10.12.2019 அன்று மக்களவையிலும், 11.12.2019 அன்று மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. இதனையடுத்து சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து சட்டம்-ஒழுங்கை பராமரித்தனர். இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குறிப்பிட்ட வழக்குகள்
இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் வேண்டுமென்று, அரசு மீது அவதூறு செய்தியை மக்களிடத்தில் பரப்பிக்கொண்டிருக்கிறார். இந்த தேர்தல் மூலமாக மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். என்றைக்கும் உண்மை, தர்மம், நீதிதான் வெல்லும். அது நம் பக்கம் இருக்கிறது. பொய் அப்போதைக்கு மினுமினுக்கும், வரலாறு படைக்காது.
பொய் பிரசாரம்
தமிழ்நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டது தி.மு.க.வினால்தான். வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், அரிசி பேர ஊழல் என ஊழலில் சாதனை படைத்த ஒரே கட்சி தி.மு.க. வீராணம் எனும் அவ்வளவு பெரிய ஊழல் செய்துவிட்டு ஸ்டாலின் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறார்.
எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று, வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு, பொய் பிரசாரம் செய்கிறார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாததால் அகோரப் பசியில் இருக்கிறார். கொஞ்சம் ஏமாந்தால் தி.மு.க.காரர்கள் ஆளையே விழுங்கிவிடுவார்கள்.
கூடங்குளம் வழக்கு
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய மக்கள் கோரிக்கை வைத்தனர். அதைப் பரிசீலித்து, பல வழக்குகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது, சில வழக்குகள் கோர்ட்டில் விசாரணையிலும், மேலும் சில வழக்குகள் முதல் தகவல் அறிக்கை நிலையிலும் உள்ளன.
தங்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டுமென்ற கூடங்குளம் பகுதி பொதுமக்களின் கோரிக்கை, சட்டத்துக்கு உட்பட்டு அரசால் கனிவோடு பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து, சங்கரன்கோவிலில் அ.தி.முக. தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
புளியங்குடியில் மகளிர் சுயஉதவி குழுவினருடன் கலந்துரையாடினார்.
சென்னை திரும்பியதும் முறையான அறிவிப்பு
கடையநல்லூர் தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும், குடியுரிமை சட்டம் தொடர்பாக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னை திரும்பினார். சென்னை திரும்பியவுடன் அதிகாரபூர்வமாக முதல்-அமைச்சர் என்ற முறையில் இது குறித்த முறையான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி1 March, 2021, Mon 5:29 | views: 317
![]() அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது1 March, 2021, Mon 5:27 | views: 310
![]() மக்களைப் பற்றி கவலை இல்லை!! தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு1 March, 2021, Mon 5:23 | views: 266
![]() அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை28 February, 2021, Sun 4:49 | views: 487
![]() மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் - கமல்ஹாசன்28 February, 2021, Sun 4:46 | views: 712
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |