காலையும் காதலும் மழையும்
24 தை 2024 புதன் 13:48 | பார்வைகள் : 2706
காலையில் எழுந்ததும் மழை சத்தம்
பிசிறு பிசிறாய் சன்னலின் வழியே
துளிகளாய் இலைகளிடை தங்கி
மண்ணின் மடியினிலே வீழ்ந்து சிதறி
புதிதாய் இனம் புரியா மோகத்தினை
தெளித்திடும் இக்காலை வேலையில்
பூக்கள் இல்லா மரமும்
மழைத்துளிகளை தாங்கி கொண்டு
தாய்மையின் பூரிப்புடன் நெகிழ்ந்திட
மழை தந்த ஈரத்துடன்
சாலை கருமையும் மின்னிட
ஒன்றை தான் மனது நினைக்கும்
நினைவுகளில் ஏக்கம் கூடும்
அவைகளின் அழுத்தம் ஓங்கும்
எனவே
உடனிருத்தல் வேண்டும் என்றும்
மௌன மொழி போதுமென்றும்
போர்வையில் உறைந்து கொண்டு
புருவ அசைவே காதல் சொல்ல
தருணங்கள் தளிர் நடனம் புரிய
மழை வரும் காலை காதலும் தரும்
என்றாய் என் மனம் அங்கலாய்க்க
ஓர் சந்தேக மெனக்கு
மண் விழுந்து கிளறி உள் நுழைந்து
வெளிவரும் வாசனை அறிவியல் என்றாலும்
சிதறும் துளிப் பட்டு குளிர் சூழ்ந்து
நினைவினில் அவள் மட்டும் வரும்
காதலும் அறிவியலா
இரசனைகளும் ரசாயணங்களும்
சங்கமித்தல் தான் காதலா
உங்களுள் மெல்லியதாய் படர்ந்திருக்கும்
காதலை கேட்டுச் சொல்லுங்களேன்…