15 வருடங்களுக்குப் பிறகு பெண் தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?
28 ஆடி 2023 வெள்ளி 15:47 | பார்வைகள் : 5099
15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வயதான பெண் வேடத்தில் நடித்திருப்பார். அவரது அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.
இதையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியானது ‘தசாவதாரம்’. இந்தப் படத்தில் 10 வெவ்வேறு கெட்டப்பில் வரும் கமல் கிருஷ்ணவேணி பாட்டி கதாபாத்திரத்தில் பெண் வேடமிட்டிருப்பார். இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்துக்காக அவர் மீண்டும் பெண் வேடமிட்டு நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முக்கியமான காட்சி ஒன்றுக்காக சிறிது நேரமே நீடிக்கும் பெண் தோற்றத்தில் கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்தப் படம் முடித்தப் பின்பு கமல்ஹாசன் ‘கல்கி 2989 ஏடி’, வினோத்துடன் 'KH 233', மணிரத்னமுடன் 'KH 234' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.