Paristamil Navigation Paristamil advert login

காங்., - தி.மு.க., மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி

காங்., - தி.மு.க., மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி

2 சித்திரை 2024 செவ்வாய் 02:24 | பார்வைகள் : 1347


கோவை - அவிநாசி சாலை பீளமேட்டில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

தி.மு.க., 45 ஆண்டுகளுக்குப் பின், காங்., அரசு எங்களை கேட்காமல் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து விட்டதாக கூறுவது கட்டுக் கதை.

தி.மு.க.,வினர் தமிழக மக்களை வஞ்சித்துள்ளனர். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல் சிங், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே, கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

கச்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது. கருணாநிதி கச்சத் தீவை கொடுக்க சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி, சிறிய அளவில் போராட்டம் நடத்தி கொள்வதாக அமைச்சர் கேவல் சிங்கிடம் பேசி உள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத் தீவை திரும்ப பெற வேண்டும். கச்சத் தீவை தாரை வார்த்தது காங்கிரசும், தி.மு.க.,வும் சேர்ந்து செய்த சதி. கச்சத் தீவை மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும்.

கச்சத் தீவு மீட்பு பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.

சரித்திரம் தெரியாமல் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகிறார். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட லாபம் இல்லை. கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்காக காங்., கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். காங்., மற்றும் தி.மு.க., மன்னிப்பு பிரசாரம் செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 'செலக்டிவ் அம்னீசியா' உள்ளது. 'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்று பேசுவது முதல்வர் பொறுப்பிற்கு அழகல்ல. கடந்த, 33 மாதங்களில் தி.மு.க., அரசு செய்த சாதனை என்ன?

கச்சத் தீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து அன்றைய பிரதமர் இந்திரா, ஒரு மத்திய அமைச்சர், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.

மீனவர்கள் நலனுக்காக இந்த பிரச்னையை தீர்க்க நாங்கள் முயல்கிறோம். இலங்கை நம்நாட்டுடன் முழுமையான நட்புறவில் உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொப்புள் கொடி உறவு என்பதால் தான். இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை.

சீனாவிற்கு நிலம் கொடுத்தது எல்லாம் காங்.,ஆட்சிக் காலத்தில் தான். நாங்கள் ஒவ்வொரு இடமாக மீட்டு வருகிறோம். பா.ஜ., அதிகாரபூர்வமாக எல்லைப் பகுதியை சீனாவிற்கு தரவில்லை. திசை மாற்றுவதற்காக கார்கே பேசுகிறார்.

இலங்கை தமிழருக்கு குடியுரிமை உள்ளது. 11 ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு குடியுரிமை தந்திருக்கிறோம். எதிர்க்கட்சிகளை ஒழிப்பேன் என பிரதமர் மோடி சொல்லவில்லை. காங்., கட்சி ஆட்சி இருக்கக் கூடாது. அப்படி வந்தால் நம் நாடு 10 ஆண்டுகள் பின்னோக்கி போய்விடும், எந்த முன்னேற்றமோ, வளர்ச்சியோ இருக்காது.

முழுமையான வளர்ச்சியடைந்த இந்தியா என்பது தான் எங்கள் நோக்கம். அதற்காகவே பா.ஜ., பாடுபடுகிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

கச்சத்தீவை திரும்ப பெறுவோம்

அண்ணாமலை மேலும் கூறியதாவது: தி.மு.க.,வின் போலி முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து கச்சத் தீவை கேட்காமல் கொடுத்து விட்டனர். இது, காங்., கட்சி செய்த சதி. நாங்கள் போராட்டம் நடத்தி மீட்கப் போகிறோம் என்று மக்களிடம் தொடர்ந்து, ஏமாற்று நாடகம் நடத்தி வருகிறது. அதை முறியடிப்பதே எங்களது வேலை. அதற்கான களப்பணியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். எப்படியும் கச்சத் தீவை திரும்ப பெறுவோம். அதற்கான அனைத்து கட்டமைப்புப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். விரைவில் மீட்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்