ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு செய்த கெளரவம்..!
24 வைகாசி 2024 வெள்ளி 10:14 | பார்வைகள் : 1727
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார் என்றும் அங்கு அவர் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அமீரக அரசு ரஜினிக்கு செய்த கௌரவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சமீபத்தில் அவர் ஐக்கிய அமீரக நாட்டிற்கு சென்றார் என்பதும் அந்நாட்டில் அவர் லூலு குழுமத்தின் தலைவரை சந்தித்து அவருடன் காரில் சென்ற புகைப்படம் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ஐக்கிய அமீரக அரசு ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. இன்று அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு கோல்டன் விசா வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக அரசு கமல்ஹாசன், காஜல் அகர்வால், சிம்பு, பார்த்திபன், டிடி உள்பட பல தமிழ் திரை உலக பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த விசாவை பெற்றவர்கள் பத்து ஆண்டுகள் அந்நாட்டின் குடிமகன்கள் போலவே கௌரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.