Paristamil Navigation Paristamil advert login

'கறுப்பு ஜூலையில்' ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தின் அனுபவம்

'கறுப்பு ஜூலையில்' ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தின் அனுபவம்

22 ஆடி 2024 திங்கள் 10:50 | பார்வைகள் : 661


1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறை சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு அத்தியாயம். அந்த இருண்ட மாதத்தின் பெருங்கேடான நிகழ்வுகள் இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களின் வாழ்வை கடுமையாகப் பாதித்தன.

இலங்கையின் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளன்  என்ற வகையில், கறுப்பு ஜூலை என்னை தனிப்பட்ட முறையிலும் தொழில்சார் அடிப்படையிலும் பாதித்தது. மேலும், ஆயிரக்கணக்கான ஏனைய தமிழ்க் குடும்பங்களைப் போன்று எனது குடும்பமும் கொந்தளிப்பான அந்த நாட்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தது.

அப்போது நான் வடக்கில் மன்னார் சென்றிருந்ததால் அந்த வன்முறையின் முழுத் தாக்கத்தையும் நான் அனுபவிக்கவில்லை. மனானாரில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மகாநாட்டு செய்திகளை சேகரிக்கும் பணிக்காக நான் மன்னாருக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். எனது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வேறு சில தமிழ்க் குடும்பங்கள் அனுபவித்ததைப் போன்ற கொடூரங்களையும் அவலங்களையும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அனுபவிக்கவில்லை. எமது குடும்பத்தில் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை. அந்த வகையில் ஏதோ ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தோம்.

சுமார் நான்கு தசாப்தங்களாக கறுப்பு ஜூலை குறித்து தனிப்பட்ட நோக்கில் நான் ஒருபோதும் எழுதவில்லை. வேதனையான நிகழ்வுகளை மீட்டிப்பார்க்க நான் விரும்பவில்லை.ஆனால் கறுப்பு ஜூலையின் 40 வது வருடாந்த நினைவாக  கடந்த வருடம் எழுதியிருந்தேன். தங்களுக்கு நேர்ந்த சோதனைகள் பற்றி எனது குடும்பத்தவர்கள் கூறியவற்றின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

1983ஆம் ஆண்டில் எனது குடும்பம் ஆறு பேரைக்( எனது பெற்றோர், இரு சகோதரிகள், சகோதரன், நான்)  கொண்டதாக இருந்தது. அப்போது பிள்ளைகளில் எவரும் திருமணம் செய்திருக்கவும் இல்லை. எனது தந்தையார் குருநாகலையில் இருந்து செயற்பட்ட ஒரு சட்டத்தரணி.எனது தாயார் ஒரு ஆசிரியை. எனது இரு சகோதரிகளில் முத்தவரும் ஒரு ஆசிரியையே. எனது சகோதரனும் நானும் கொழும்பில் வேலை செய்துகொண்டு தனித்தனியாக தங்கியிருந்தோம். எனது இளைய சகோதரி கல்வி பொதுத்தராதர பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தார்.

எனது தாயார்  1982  ஆம் ஆண்டில் குருநாகலையில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்கு பிறகு தனது பிற்ளைகளுடன் அவர் கொழும்புக்கு குடிபெயர விரும்பினார். முன்னதாக கொழும்பில் பதினேழு வருடங்கள் படிப்பித்ததால் அதை அவர் எப்போதும் சொந்த ஊர் போன்று உணர்ந்தார். அதனால் இரத்மலானையில் கசீயா அவனியூவில் உள்ள ஒரு வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்தோம்.தாயாரும் சகோதரனும் இளைய சகோதரியும் அங்கு வசித்தனர். 

குருநாகலையில் தொடர்ந்தும் தங்கியிருந்த தந்தையாரும் மற்றைய சகோதரியும் வார இறுதிகளில் கொழும்புக்கு வந்துபோவார்கள். ' த ஐலண்ட் ' பத்திரிகையில் நான் இரவு கடமைகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் கொட்டாஞ்சேனையில் உள்ள அறையிலேயே தங்கியிருந்தேன். இரத்மலானைக்கும் கொட்டாஞ்சேனைக்கும் இடையே நான்  155 ஆம் இலக்க பஸ்ஸில் சென்றுவருவேன்.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மகாநாட்டுக்காக 1983 ஜூலை  22 வெள்ளிக்கிழமை காலை நான் மன்னாருக்கு புறப்பட்டுச் சென்றேன். தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்த வார இறுதியில் நான் மன்னாரில் இருந்தேன். குருநாகலை தமிழ்ப்பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருந்த எனது சகோதரி குருநாகலைக்கு திரும்புவதற்காக ஜூலை 25 காலை புறக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டார். செவ்வாய்க்கிழமை குருநாகலைக்கு திரும்பும் எண்ணத்தில் தந்தையார் கொழும்பிலேயே இருந்தார்.

இரத்மலானையில் எமது வீட்டு உரிமையாளரான சிங்களவர் அருகாக ஒரு்பகுதியில் வசித்துவந்தார். பொரளையிலும் திம்பிறிகஸ்யாயவிலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக கேள்விப்பட்டதாக அவர் எமது குடும்பத்தவர்களிடம் கூறினார்.  குண்டர்கள் தாக்குதல் நடத்த வந்தால் வீட்டின் பின்முறமாக பற்றைகள் நிறைந்த சதுப்புநிலப் பகுதியில் மறைந்திருக்குமாறு அவர் எமது குடும்பத்தவர்களுக்கு ஆலோசனை கூறினார். யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தினால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட செய்தியை காலையில் பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அதே தினம் அந்த செய்தி தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அறிவிக்கப்பட்டது. வன்முறை தீவிரமடைந்து பரவியது.

குண்டர்கள் இரத்மலானையிலும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்கள். காசீயா அவெனியூவில் குண்டர்களுக்கு தலைமைதாங்கி வந்தவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன். எனது பெற்றோரும் சகோதரனும் சகோதரியும் சதுப்புநிலப் பகுதிக்கு சென்று பற்றைகளுக்குள் மறைந்திருந்தனர். அங்கு கபறக்கொய்யாவும் பாம்புகளும் ஊர்ந்துகொண்டு திரிந்தன. எனது தந்தையாரும் சகோதரரும் பெரிய சமையலறைக் கத்தியையும் மண்கிண்டியையும் ஆயுதமாக எடுத்துக் கொண்டனர். தாயார் சில வாரங்களுக்கு முன்னர் சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் பற்றைக்குள்  பதுங்கியிருப்பதற்கு பெரிதும் கஷ்டப்பட்டார்.

குண்டர்களின் தலைவர்கள் எமது வீட்டு உரிமையாளரிடம் வந்து எமது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்களின் விபரங்கள் அவர்களிடம் இருந்தன. தனது வீட்டு வாடகைக் குடியிருப்பாளர்கள் குழப்பங்கள் பறாறி கேள்விப்பட்டதும் காலையிலேயே அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாக உரிமையாளர் குண்டர்களிடம் கூறினார். எமது வீட்டு வாயிலுக்கு சென்ற குண்டர்கள் கதவை உடைக்க முயற்சித்தனர். தீவைக்கும் ஒரு முயற்சியாக தரைவிரிப்புக்கு பெற்றோலை ஊற்றினர். அதை உரிமையாளர் ஆட்சேபித்தபோது எமது தளபாடங்களை எரிக்கப்போவதாக குண்டர்கள் கூறினார்கள்.  அவையெல்லாம் வாடகைக்கு இருப்பவர்களுக்கு சொந்தமானவை அல்ல தன்னுடையவை என்று அவர் கூறவே எமது குடும்பம் திரும்பிவந்தால் தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவரை எச்சரித்துவிட்டு குண்டர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இரவானதும் எனது குடும்பம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து வெளியே வந்து பின்பக்கத்தால் வீட்டுக்குள் நுழைந்தனர். மின்விளக்கு எதையும் போடாமல் இரவு முழுவதும் அவர்கள் அங்கே இருந்தனர். ஜூலை 26  செவ்வாய்கிழமை விடிந்ததும் எல்லாமே அமைதியாக இருப்பதைப் போன்று தோன்றியது. தனது வீட்டில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்று உரிமையாளர் விரும்பினார். எனது பெற்றோரும் சகோதரங்களும் பாதுகாப்பு தேடி கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அது அதிகாலை வேளை.  வழியில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. பல தமிழ்க் குடும்பங்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்தன. 

சிறிது நேரம் கழித்து பொலிசார் எனது குடும்பம் உட்பட சகல குடும்பங்களையும் இரத்மலானை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமுக்கு கூட்டிச் சென்றனர். எதிர்பார்க்கப்பட்தைப் போன்றே ஆட்கள் நிரம்பிவழிந்த விமான  நிலைய முகாமில் நிலைமை படுமோசமானதாக இருந்தது. போதிய இடவசதியின்மை,  மலசலகூட வசதிகள் போன்ற சுகாதார வசதிகள் இல்லாமை, போதிய உணவின்மை ஆகியவை பெரிய பிரச்சினையாக இருந்தது.

குருநாகல் 

குருநாகலையில் இருந்த எனது சகோதரி பற்றியே எமது குடும்பம் அப்போது பெருங்கவலை கொண்டிருந்தது. தமிழ்பேசும் மக்கள் வாழும் மன்னாரில் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். கொழும்பில் இருந்து குருநாகலை நோக்கி சென்ற பஸ் ஒன்று அளவ்வ பகுதியில் இடைமறிக்கப்பட்டு அதில் இருந்த சகல தமிழ்ப் பயணிகளும் கொல்லப்பட்டதாகவும் சடலங்கள் பாலத்தில் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும்  செய்திகள் வெளியாகின. அதனால் எனது சகோதரி பாதுகாப்பாக இருப்பாரா இல்லையா எமது குடும்பம் கவலைப்பட்டது. என்னைப் பொறுத்தவரை  நான் மன்னாரில் பாதுகாப்பாக இருக்கும்போது எனது குடும்பத்துக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று பெரும் வேதனையாக இருந்தது.

ஆனால், எனது சகோதரி பாதுகாப்பாக குருநாகலை போய்ச் சேர்ந்தார். வெளியில் தலைகாட்டாமல் அவர் வீட்டுக்குள்ளேயே அமைதியாக இருந்தார். குடும்பத்தின் ஏனையவர்கள் பற்றியே அவருக்கு கவலை. குருநாகலையில் எமது அயலவர் ஒரு சிரேஷ்ட சிங்கள பொலிஸ் அதிகாரி. அதனால்  அயலில் இருந்த தமிழர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டார்கள்.

மன்னார்

எனது குடும்பத்தின் கதி பற்றியே எனக்கு மனக்கலக்கமும் அச்சமும். அந்த நாட்களில் கைத்தொலைபேசி இருக்கவில்லை. கொழும்பு போன்ற தொலைதூர இடக்களுக்கு தொலைபேசி அழைப்பு  ஒன்றை எடுப்பதும் மன்னாரில் ஒரு பிரச்சி னயாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் அன்றைய மன்னார் மாவட்ட அமைச்சராக இருந்த மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஈ. எச். மஹ்ரூப்பின் செயலாளராக இருந்த ரெறன்ஸ் பிலிப்புப்பிள்ளை என்ற தமிழ் அரசாங்க அதிகாரியுடன் தொடர்புகொண்டேன்.

அந்த நாட்களில் நான் ' சண்டே ஐலண்ட் '  பத்திரிகையில் ' கிடுகு வேலிக்கு பின்னால் ' ( Behind the Cadjan Curtain) என்ற வாரஇறுதிப் பத்தியொன்றை எழுதிக்கொண்டிருந்தேன்.  மன்னார் மாவட்ட அமைச்சரின் செயலாளர் ரெறன்ஸ் அதை தவறாது வாசிக்கும் ஒரு எனது ரசிகர் என்பதை அறிந்ததும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதற்கு பிறகு தொலைபேசி அழைப்பை எடுப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.

மன்னாரில் இருந்து ' த ஐலண்ட் ' ஆசிரிய பீடத்துடன் கிரமமாக தொடர்பில் இருந்தேன். வன்முறை வெடித்தபோது  பத்திரிகையின் ஆசிரியர் நாட்டில் இருக்கவில்லை. அன்றைய பிரதி ஆசிரியர் காமினி வீரக்கேன்  பொறூப்பாக இருந்தார். ஆசிரிய பீடத்துடன் கிரமமாக தொடர்புகொண்டு எ்்ன நடக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன். எனது ஆசிரிய பீடச் சகாக்களும் நண்பர்களுமான அஜித் சமரநாயக்கவும் பிரசாத் குணவர்தனவும் அலுவலக  வாகனத்தில் இரத்மலானைக்கு சென்று எனது குடும்பத்தவர்கள் இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை வீட்டு உரிமையாளரின் மூலமாக அறிந்து கொண்டனர்.

அதேவேளை , இரத்மலானை விமான நிலைய அதிகாரிகள் ஆட்கள் உள்நாட்டு தொலைபேசி அழைப்புக்களை எடுப்பதற்கு அனுமதிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் அந்த நாட்களில் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கு நெருக்கமாக இருந்தவருமான எமக்கு  சகோதரர் உறவுமுறை கொண்ட  நோபல்  வேதநாயகத்துடன் எனது பெற்றோர் தொடர்பு கொண்டனர். நோபல்அண்ணா பம்பலப்பிட்டியில் புதிய வீட்டு்க்கு மாறி புதுக்கடையில் இருந்த  முன்னைய வீட்டை தனது அரசியல் அலுவலகமாக மாற்றியிருந்தார்.

அவரின் புதுக்கடை வீடு ஒரு மினி அகதிமுகாமாக மான்றப்பட்டிருந்தது. உறவினர்கள் அங்கு ' தஞ்சம் ' அடைந்தார்கள். அதற்கு பொலிஸ் பாதுகாப்பு இருந்தது. கொழும்பு  12 இல் இருந்த நோபல் அண்ணாவின்  அந்த வீட்டுக்கு எனது குடும்பத்தை கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எனது குடும்பமும் உறவினர்களில் பெரும்பாலானவர்களும் மெதடிஸ்காரர்கள். ஜூலை 29 வெள்ளிக்கிழமை மூன்று மெதடிஸ் மதகுருமார் எனது குடும்பத்தை புதுக்கடைக்கு கூட்டிச் செல்ல ஒரு வானில் வந்திருந்தனர். வாகனத்தில் நிறைய ஆட்கள் இருந்ததால் தாயாரும் சகோதரியும் அதில் செல்வது என்றும் தந்தையாரும் சகோதரனும் பஸ்ஸில் பின்தொடர்ந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜூலை  28  வியாழக்கிழமை கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வன்முறை தணிந்து நிலைவரம் மெல்லமெல்ல வழமைக்கு திரும்புவதைப் போன்று தோன்றியது. ஆனால் திடீரென்று நிலைவரம் மாறியது.

மயிரிழையில் உயிர்தப்பினர்

விடுதலை புலிகள் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்துவதாக வதந்தி ஒன்று பரவத்தொடங்கியது. இது வதந்தி மாத்திரமே. ஆனால் தமிழர்களை மீண்டும் தாக்குவதற்கு சாக்குப்போக்காக அமைந்தது. ஓரளவு பாதுகாப்பாக இருந்த அகதி முகாம்களை விட்டு வெளியேறிய பல தமிழர்கள் அந்த களங்கம் மிக்க 'கொட்டி தவசவ' வில் (புலிகள் தினத்தில்) கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவை  பெருங்கவலைக்குரிய சம்பவங்கள். அந்த வெள்ளிக்கிழமை எனது தந்தையாரும் சகோதரரும் மயிரிழையில் உயிர்தப்பினர்.

விமான நிலைய முகாமில் இருந்து புறப்பட்டு, புதுக்கடைக்கு வருவதற்கு பஸ்ஸையோ, டாக்சியையோ அல்லது முச்சக்கர வண்டியையயோ பிடிப்பதற்காக  அவர்கள் இருவரும் காலி வீதி நோக்கி நடந்துவந்தனர். ஆனால் காலி வீதியை அவர்கள் அடைந்தபோது தமிழர்களை மீண்டும் ஆவேசத்துடன் தேடிக்கொண்டிருந்த குண்டர்கள் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டனர். அந்த களேபரத்தில் தந்தையாரும்  சகோதரரும் பிரிந்துவிட்டனர்.

சகோதரர் வன்முறைக் கும்பலுக்குள் கலந்து சிறுது நேரம் அதன் ஒரு்பகுதியாகவே மாறியிருந்தார். வன்முறைக் கும்பலில் ஒரு பிரிவினர் தமிழ்்அகதிகளை ஒழித்துக்கட்டப்போவதாக  அச்சுறுத்திக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். எனது சகோதரரும் அவர்களுடன் சேர்ந்து சுலோகங்களை எழுப்பிக்கொண்டு சென்றார். கும்பல் விமான நிலையத்தை அடைந்ததும் எனது சகோதரர் கும்பலிடமிருந்து நழுவி தனது முகாம் அடையாள அட்டையைக் காண்பித்து முகாமுக்குள் சென்றுவிட்டார். கும்பல் சீற்றத்துடன் அங்கு காவல் கடமையில் இருந்த கடற்படை வீரர்களை நோக்கி தூஷண வார்த்தைகளினால் திட்டியது. ஆனால் கடற்படை வீரர்கள்உறுதியாக நிற்கவே கும்பல் படிப்படியாக கலைந்து சென்றது.

எனது தந்தையார் இன்னொரு பிரிவு கும்பலுடன் மோசமான அனுபவத்தைச் சந்தித்தார். சிலர் அவரைத் தமிழர் என்று சந்தேகித்து பயமுறுத்தினர். அவர் சரியான உச்சரிப்புடன் கச்சிதமாக சிங்களத்தை பேசியதால் அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதை குண்டர்களினால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. பௌத்த கதை ஒன்றைக் கூறுமாறு அவர் கேட்கப்பட்டார். தான் ஒரு பௌத்தர் அல்ல கிறிஸ்தவர் என்று உண்மையாக அவர் பதிலளித்தார். சிலர் அவரது கழுத்தை நெரித்தனர்." என்னைப் போன்ற வயோதிபனைக் கொலை செய்வதில் உங்களுக்கு  என்ன பிரயோசனம்" என்று மூச்சுவிடக் கஷ்டப்பட்ட வண்ணம் தந்தையார் சிங்களத்தில் அவர்களைக் கேட்டார். அவர்கள் விடுவித்ததும் அவரும்  நேரடியாக விமானநிலைய முகாமுக்கே சென்றார்.

மெதடிஸ் மதகுருமார்

மெதடிஸ் மதகுருமாருடன் சென்ற வாகனத்தையும் குண்டர்கள் வழிமறித்து பயமுறுத்தினர். சிங்கள போதகர் பேசி ஒருவாறாக பேசி அவர்களிடமிருந்து விடுபடக்கூடியதாக இருந்தது. ஆனால் கொழும்பு நோக்கிப் போவது ஆபத்து என்ற உணரப்பட்டதால் தசையை மாற்றி வாகனம் மொரட்டுவையைச் சென்னடைந்தது. வார இறுதி முழுவதும் தாயாரும் சகோதரியும் சிங்கள  மெதடிஸ் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை மாலை மெதடிஸ் மதகுருமார் தாயாரையும் சகோதரியையும் புதுக்கடைக்கு கூட்டிவந்தனர். அவர்களுக்கு அங்கு மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. குருநாகலையில் இருந்த எனது மற்றைய சகோதரி நோபல் அண்ணாவின் பாதுகாப்பான  புதுக்கடை வீட்டுக்கு வந்துவிட்டார். குருநாகலையில் அயலில் இருந்த சிங்கள பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் சகோதரி பொலிஸ் ஜீப் ஒன்றில் அங்கு கடடிவரப்பட்டார். தந்தையாரும் சகோதரரும் கூட புதுக்கடைக்கு திங்களன்று வந்துசேர்ந்தனர். என்னைத் தவிர முழுக் குடும்பமும் மீண்டும் இணைந்துவிட்டது.

மேலும் உறவினர்கள் படையெடு்க்கவே புதுக்கடை வீடு நிறைந்துவிட்டது. அதனால் பெண்களையும் சிறுவர்களையும் மாத்திரம் அங்கு தங்கவைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தந்தையாரும் சகோதரனும்  அங்கிருந்து  வெளியேறி கல்கிசை சென். தோமஸ் கல்லாரியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் தங்குவதற்கு வாய்ப்பைத்  தேடிக்கொண்டனர்.

தாங்கள் சகலரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாயாரும் சகோதரியும் புதுக்கடையில் எமது நோபல் அண்ணாவின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் எனது குடும்பம் ' த ஐலண்ட் ' ஆசிரிய பீடத்துக்கு அறிவித்தது. மன்னார் மாவட்ட அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து நான் தொலைபேசியில் அவர்களுடன் பேசினேன்.

கொழும்புக்கு திரும்பினேன்

1983  ஆகஸ்ட் 4 ஆம் திகதி நான் கொழும்புக்கு திரும்பினேன். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு உள்ளூர் நிருபராக இருக்கும் மன்னாரைச் சேர்ந்த முஹமட் என்ற ஒரு பத்திரிகையாளர் நண்பர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடன் பேசி அவரது சொந்த இடமான கண்டிக்கு என்னை வாகனத்தில் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்தார். வழியில் பிரச்சினை ஏதாவது வருமென்றால் நான் அவரின் ஒரு முஸ்லிம் உறவினராக என்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். 

அந்த நேரம் வன்முறை தணிந்திருந்தது. அதனால் மன்னாரில் இருந்து கண்டிக்கான கார்ப்பயணம் சம்பவம் எதுவுமின்றி இனிதே அமைந்தது. கண்டியில் இருந்து கொழும்பு பஸ் ஒன்றில் ஏறி நேரடியாக கொட்டாஞ்சேனையில் புளூமெண்டால் வீதியில் அமைந்திருக்கும் ' த ஐலண்ட் '  அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தேன். என்னைக் கண்டதும் சகாக்களும் நண்பர்களும்  மகிழ்ச்சியடைந்தனர்.

நான் உடனே வேலையில் மூழ்கி உடனடியாகவே எனது பெயரில் எழுதத் தொடங்கினேன். நடந்துமுடிந்த சம்பவங்களைச்  சமாளிப்பதற்கு  நான் கையாண்ட வழி அது. பத்திரிகையில் எனது பெயரைக் கண்டதும் நண்பர்களும் என்னுடன் தொடர்புகளைப் பேணுகிறவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னுடன் பேசத்தொடங்கினர்.

நான் 'த ஐலண்ட்'  வளாகத்திலேயே தங்கியிருந்து அலுவலகத்துக்கு அருகாமையில் இருந்த சிங்கள, முஸ்லிம் உணவகங்களில் சாப்பிட்டேன். சாரதிகளின் விடுதியில் குளித்தேன். செய்திப்பத்திரிகைக் கோவைகளை தலையணையாக பயன்படுத்தி ஆசிரியபீட மேசைகளில் இரவில் நித்திரைகொள்வேன். இரவில் என்னுடன் அஜித்,பிரசாத் மற்றும் குலே (  கே.சி. குலசிங்க ) ஆகியோர் என்னுடன் கூட இருப்பர்.

நாடு்திரும்பிய ஆசிரியர் விஜிதா யாப்பா அலூவலகத்தில் இரவில் தங்குவதையும் சாதிகளின் விடுதியில் குளிப்பதையும் கண்டு பெரிதும் கவலையடைந்தார். எம்.ஆர்.ஏ. (Moral Re - armament)  அமைப்பின் ஒரு நீண்டகால உறுப்பினரான விஜிதா எனது பாதுகாப்பு குறித்து அக்கறைகாட்டினார். அவர் ஒரு மற்றவர்களின் துன்பங்களைக் கண்டு இரங்குகின்ற சுபாவமுடைய உணர்ச்சிபூர்வமான ஒரு ஆன்மா.  என் முன்னால் கண் கலங்கி அழுது சில சிங்களவர்களினால் தமிழர்களுக்கு செய்யப்பட்ட கொடுமைக்காக மன்னிப்புக் கேட்டார்.

விஜிதா தனது மாமாயாரின் வீட்டில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு அறையில் என்னை தங்கவைத்தார். காலையில் தனது காரில் அலுவலகத்துக்கு என்னை கூட்டிச்சென்று பிறகு  இரவில் கொண்டுவந்து இறக்கிவிடுவார்.இது பண்பட்ட ஒரு ஆசிரியரின் நல்லெண்ண வெளிப்பாடு. அவரது மாமியாரும் கூட பரிவிரக்கம் கொண்ட ஒரு பெண்மணி. அவர்களது இரக்ககுணத்தை நான் மெசிசினாலும் , அங்கு தொடர்ந்தும் தங்கியிருப்பது எனக்கு எதோ அசௌகரியமானதாக இருந்தது.

அதனால் நான் எனது கொட்டாஞ்சேனை அறைக்கு திரும்பினேன். அது முப்பதுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கியிருந்த ஒரு பெரிய விடுதியின் ஒரு பகுதி. இப்போது தனந்தனியனானேன்.  எனது அறையில் தனியாக படுத்திருந்து 'த ஐலண்ட்'  ஆசிரிய பீடத்துக்கு தொடர்ந்து வேலைக்குச் சென்று வந்தேன். படிப்படியாக விடுதிக்கு மற்றையவர்களும் வரத்தொடங்கினார்கள்.

கட்டைவேலி

அதேவேளை எனது குடும்பம் இரத்மலானைக்கு திரும்பிச் செல்வதற்கு முயற்சித்தது. ஆனால் எங்களது இருப்பிடம் குறித்து தன்னிடம் அடிக்கடி விசாரிக்கப்படுவதாகவும் அதனால் திரும்பிவரவேண்டாம் என்று வீட்டு உரிமையாளர் எச்சரிக்கை செய்தார். அதனால் தாயாரும் இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் உள்ள தாயாரின் பூர்வீக கிராமமான கரவெட்டிக்கு ரயிலில் சென்றார்கள். எமது முன்னாள் வீட்டு உரிமையாளர் எமது தளபாடங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டதால் சில வாரங்கள் கழித்து அவற்றை நாம் இரத்மலானையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் சென்றோம்.

தந்தையார் குருநாகலைக்கு திரும்பிய அதேவேளை நானும் சகோதரனும் கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்தோம். சில மாதங்கள் கழித்து எனது சகோதரி குருநாகலையில் வேலைக்கு வரவேண்டியிருந்தது. அல்லது ஆசிரியை தொழிலை அவர் இழக்கவேண்டி வந்திருக்கும். இந்த சூழ்நிலைகளில் தாயாரும்  இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தை விட்டு மீண்டும் குருநாகலைக்கு திரும்பிவந்தனர்.

இதுவே எனது குடும்பத்தின் கறுப்பு ஜூலை அனுபவம் பற்றிய கதை. இது அந்த நாட்களின் பல கதைகளில் ஒன்று. ஒவ்வொன்று வெவ்வேறு விபரங்களைக் கொண்டவை. ஆனால் சாராம்சத்தில் ஒரே மாதிரியானவை.எமது குடும்பத்தின் கதையை அக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கூறுவதற்கு நான் முயற்சித்திருக்கிறேன். ஆனால் நினைத்துப் பார்க்கும்போது அது உணர்ச்சிவசப்பட வைப்பதாகவும் வேதனையானதாகவும் இருக்கும்.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்