Paristamil Navigation Paristamil advert login

கொள்கைகளை மாற்றாவிட்டால் சிக்கல்: இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை

கொள்கைகளை மாற்றாவிட்டால் சிக்கல்: இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை

3 ஆவணி 2024 சனி 03:40 | பார்வைகள் : 708


இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றவில்லை என்றால், நடுத்தர வருமான பிரிவிலேயே அவை சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக, உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1990ம் ஆண்டு முதல் தற்போது வரை, மொத்தம் 34 நாடுகள் மட்டுமே, நடுத்தர வருமான பிரிவிலிருந்து அதிக வருமானம் ஈட்டும் பிரிவுக்கு முன்னேறி உள்ளன.

மாற்ற வேண்டும்:

இதையடுத்து, தற்போது நடுத்தர வருமான பிரிவில் உள்ள நாடுகள், அதிக வருமானம் ஈட்டும் பிரிவுக்கு முன்னேற, பல அற்புதங்களைச் செய்தால் மட்டுமே, அந்த நிலையை எட்ட முடியும். பழைய யுக்திகளையே பயன்படுத்தி முன்னேற நினைப்பது என்பது, முதல் கியரில் காரை இயக்கி, வேகமாக செல்ல முயற்சிப்பதற்கு சமம் ஆகும். இதனால் எந்த பயனும் இல்லை.

நடுத்தர வருமான பிரிவில் உள்ள 108 நாடுகளின் பெரிய பிரச்னை என்னவென்றால், வழக்கமாக வளர்ச்சியடைய பயன்படுத்தி வந்த வழிகள் இல்லாமல் போய்விட்டன; அல்லது, தற்போது செயலிழந்து வருகின்றன என்பது தான். இந்த நாடுகளின் மற்றொரு பிரச்னை, இவை பணக்கார நாடாக மாறுவதற்கு முன்பே, வயதானவர்களை கொண்ட நாடாக மாறிவிடும் நிலையில் உள்ளன.
போதாக்குறையாக, பருவ நிலை மாற்றம் கூடுதல் சவாலை ஏற்படுத்துகிறது. பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள, பணக்கார நாடுகளைக் காட்டிலும் ஏழை நாடுகளுக்கே அதிக செலவாகும். இதனால், நடுத்தர வருமான பிரிவில் உள்ள நாடுகள், தங்களது கொள்கைகளை மாற்றியே ஆக வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லையென்றால், அமெரிக்க தனிநபர் வருமானத்தில் 25 சதவீதத்தை அடைய, சீனாவுக்கு 10 ஆண்டுகளுக்கு கூடுதலாகவும்; இந்தோனேஷியாவுக்கு 70 ஆண்டுகளும்; இந்தியாவுக்கு 75 ஆண்டுகளும் தேவைப்படும். வளரும் நாடுகள், வளர்ச்சி தடைபடாமல் இருக்க, மூன்று முக்கிய விஷயங்களை பின்பற்றுவது அவசியம். முதலீடு, புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்துதல் மற்றும் கண்டுபிடிப்புகள்.

சிறந்த கண்டுபிடிப்பு:

இந்தியா போன்ற நாடுகள், புதிய தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து, அதிக திறன் கொண்ட பணியாளர்களைக் கொண்டு, அதனை பரவலாக பயன்படுத்த வேண்டும். மேலும், பல புதிய நிறுவனங்களைக் கொண்டு, திறனற்ற பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை மாற்ற வேண்டும். இந்த புதிய நிறுவனங்கள் ஒரு சில குழுமங்களை சேர்ந்ததாக மட்டுமே இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆதார் அடிப்படையிலான பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் டாடா நிறுவனத்தின் யுக்தி சார்ந்த சில இறக்குமதி திட்டங்கள் அந்நாட்டின் சிறந்த கண்டுபிடிப்புகளாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்