பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள் என்னென்ன?
1 புரட்டாசி 2024 ஞாயிறு 11:41 | பார்வைகள் : 1987
குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும், கேட்கும் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு விஷயங்களையும் பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அவர்கள் சின்ன விஷயங்களைக்கூட கவனிக்க தவறமாட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் கவனிக்கும் சில விஷயங்களை குழந்தைகள் நாளடைவில் பின்பற்ற தொடங்குவார்கள். வீட்டில் பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்தே அவை தொடங்கும் என்பதால், குழந்தைகள் முன்பு மிகவும் கவனமான வார்த்தைகளை பெற்றோர் பேச வேண்டும். எதிர்மறையான வார்த்தைகள், ஆபாச வார்த்தைகள் போன்றவற்றை முற்றும் முழுதாக தவிர்க்க வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பதைக் காட்டிலும், எதனை செய்ய வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.
எதிர்மறை வார்த்தைகள்: ஏற்கனவே கூறியதுபோல் பெற்றோர்கள் பயன்படுத்தும் சில எதிர்மறை வார்த்தைகள், குழந்தைகளுக்கு எதிர்மறையான சிந்தனைகளின் உருவாவதற்கு தொடக்க புள்ளியாக அமையும். உதாரணமாக, ‘கேம் விளையாடுவதை இப்போதே நிறுத்து, இதை செய்ய முட்டாளா நீ?, தூங்குவதற்கு முன்பு கட்டாயம் வீட்டுப் பாடங்களை முடித்துவிட வேண்டும், இப்படி உட்காராதே, சாப்பிட்டால் மட்டுமே உனக்கு இனிப்பு கிடைக்கும்’ இதுபோன்ற ஏராளமான வார்த்தைகள் அன்றாடம் பெற்றோர்கள் உபயோகப்படுத்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு எதிர்மறை எண்ணங்களை உருவாக காரணமாக இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், நெகடிவ்வாக வேறொரு பார்வையில் அவர்களை சிந்திக்க வைக்கும்.
பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள்: மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் பேசும்போது எதிர்மறையான ஒலியுடன் இருக்கும். அதற்கு பதிலாக சொல்ல வேண்டியதை நேர்மறையான ஒலியுடன் இருக்கும் வார்த்தைகளை உபயோகப்படுதலாம். நீங்கள் சொல்லும் அணுகுமுறை, உங்கள் மீது அவர்களுக்கு மதிப்பு ஏற்படுத்துபவையாக இருக்கும். மேலும், அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் இருக்காது. தாங்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும் என நினைத்திருக்கும்போது, கட்டளையிட்டால் குழந்தைகள் உங்களின் வார்தைகளுக்கு எதிராக செயல்பட வேண்டும் என நினைப்பார்கள். கனிவுடன் கூறினால், நீங்கள் எதிர்பார்க்கும் அணுகுமுறை அவர்களிடமிருந்து கிடைக்கும். உதாரணமாக, ‘இன்றைக்கு கேம் விளையாடியது போதும், நீங்கள் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கலாம், வீட்டுப்பாடங்களை சீக்கிரம் முடித்துவிடுங்கள், உங்களுக்கு இனிப்பு காத்திருக்கிறது’ எனக் கூறலாம். இந்த வார்த்தைகள் ஒரே பொருள் உடையவையாக இருந்தாலும், அணுகுமுறையும் சொல்லும் விதமும் கனிவானதாக இருக்கும்.
சாபம் அல்லது ஆபாச சொற்களை தவிர்த்தல்: குழந்தைகளின் நம்பிக்கையை பாதிக்கக்கூடிய சொற்களை ஒருபோதும் பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் உங்களுக்கு பெரிதாகத் தெரியாது. ஆனால், அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலைக் கொடுக்கும். தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். தவறான பாதைகளை பின்பற்றுவதற்கான வழிகளை தேடத் தொடங்குவார்கள். குழந்தை வளர்ப்பில் இது ஆபத்தானது என்பதால், மென்மையான, கனிவான வார்த்தைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். நல்ல செயல்களை பாராட்ட வேண்டும். தோல்விக்கு அரவணைத்து, ஊக்குவிக்க வேண்டும். உங்களுடைய ஊக்குவிப்பு சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதையும், முடிவெடுக்கும் திறனையும் குழந்தைகளுக்குள் வளர்க்கும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை: நல்ல வார்த்தைகளை உபயோகப்படுத்துபவர்கள், எப்போதும் மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையை நேர்மறையாகவும் அணுகுவார்கள். அவர்களுடைய குழந்தைகளும் அப்படியே வளர்க்கப்படுவார்கள். இதனால் நல்ல நண்பர்கள் வட்டாரம் உருவாகும். எதிரிகள் இருக்க மாட்டார்கள். நேர்மை, அன்பு, பாசம் ஆகியவற்றை உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் காணமுடியும். மரியாதைக்கு இழுக்கான எந்தவொரு செயலையும் அவர்கள் நிச்சயம் செய்ய மாட்டர்கள், நீங்கள் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தும்போது.