கேரட் பொரியல்
3 புரட்டாசி 2024 செவ்வாய் 13:51 | பார்வைகள் : 608
கேரட் வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும். இது கண் ஆரோக்கியத்திற்கும் நல்ல பார்வைக்கும் அவசியம். கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் , குடல் இயக்கத்தை சீராக்கவும் , மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. அவை நார்ச்சத்து நிறைந்த குறைந்த கலோரி உணவு என்பதால் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.ஆனால் சிலர் இதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே கேரட் பிடிக்காதவர்கள் கூட ருசித்து சாப்பிடும் வகையில் கேரட் பொரியலை எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 3
பெரிய வெங்காயம் - 1
துருவிய தேங்காய் - 1/4 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கேரட்டை நன்றாக அலசி அதன் தோலை சீவிக்கொள்ளுங்கள்.
பின்னர் கேரட்டை தேவையான அளவு பொடி பொடியாக நறுக்கி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
தற்போது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காய தூள் சேர்த்து கலந்து வதக்கவும்.
பின்னர் அதில் வேகவைத்த கேரட் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கி இறக்கினால் சுவையான கேரட் பொரியல் சாப்பிட ரெடி..
இந்த கேரட் பொரியலை சாம்பார், காரக்குழம்பு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.