Paristamil Navigation Paristamil advert login

தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

4 ஆவணி 2024 ஞாயிறு 03:02 | பார்வைகள் : 811


நடிகர் தனுஷ் மீது பல புகார்களை அடுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம், அவரின் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளது. அதற்கான காரணம் என்ன… அதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

தனது தந்தையின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான தனுஷ், தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக உருவெடுத்து வருகிறார். தமிழ் திரையுலகம் தாண்டி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கும் தனுஷ், ஹாலிவுட் படங்களையும் விட்டுவைக்கவில்லை. தனது தேர்ந்த நடிப்பால் கவனம் ஈர்க்கும் தனுஷுக்கு வசூல் ரீதியாகவும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிப்பு, இயக்கம் என தனுஷ் பிசியாக இருந்து வரும் நிலையில் அவரது திரைப்படங்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். அதாவது, தனுஷை வைத்து படம் இயக்கவோ அவரின் படங்களை திரையரங்கில் வெளியிடவோ, படங்களை விநியோகம் செய்யவோ கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நடிகர்கள் எந்த தயாரிப்பாளரிடம் முதலில் பணம் பெறுகின்றனரோ, அவர் படத்தில் நடித்துவிட்டு அடுத்த படத்திற்கு செல்வது தமிழ் சினிமாவில் விதியாக இருந்தது. அதைத் தற்போது நடிகர்கள் மதிப்பதேயில்லை என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

குறிப்பாக, தனுஷ் 6 தயாரிப்பாளர்களிடம் முன்தொகை பெற்றுக்கொண்டு, கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக, தேனாண்டாள் முரளி தயாரித்த ஒரு படம், பாதியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் Five Star கதிரேசன் உள்ளிட்டோருக்கு முன்பணம் பெற்றுக்கொண்டு தனுஷ் கால்ஷீட்டே கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத்திற்கு தெரியப்படுத்தி, பேச்சுவார்த்தைக்கு தனுஷ் தரப்பை பல முறை அழைத்தும் வராததால்தான், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்க தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியோ, தனுஷ் மீதான புகார் தங்களுக்கு தெரியப்படுத்தப்படவே இல்லை என விளக்கமளித்துள்ளார். இதனால் இவ்விவகாரம் புரியாத புதிராகவே உள்ளது. எனினும் தனுஷ் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாகிறது.

தமிழ் சினிமா வசூல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், சில நடிகர்களின் படங்கள் மட்டும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் தனுஷின் படங்களும் அடக்கம். எனவே, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அமர்ந்து பேசி, சமரசத்திற்கு முயற்சிக்க வேண்டும் என்றே சினிமா வியாபாரத்தில் உள்ள பலர் எதிர்பார்க்கின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்