இலங்கை அணியில் அறிமுகமான தமிழ் வீரர்
4 ஆவணி 2024 ஞாயிறு 07:56 | பார்வைகள் : 782
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிமுகத்தில் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷிராஸ், இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்தில் உள்வாங்கப்பட்டார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று ஆரம்பமாகியது.
இதன் முதல் ஆட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (02) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் (R. Premadasa Stadium) நடைபெற்றது.
இந்த போட்டியின் வெற்றியானது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என வர்ணனையாளர்கள் கூறியிருந்தாலும் இலங்கை அணியின் சூழல் பந்து வீச்சானது போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது.
அதில் வேகப்பந்துவீச்சாளர்கள் துஷ்மந்த சமீரா, நுவான் துசாரா மற்றும் பினுரா பெர்னாடோ ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறியது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
எனவே ஒருநாள் தொடர்களில் சிறந்த பந்துவீச்சாளராக முகமது சிராஸ் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.
உள்ளக ஒருநாள் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஸின் பந்து வீச்சு சராசரி 17.52 என காணப்படுகிறது.
21 வயதில் முதல் தர கிரிக்கெட்டை ஆரம்பித்த சிராஸ் எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
நடப்பு இலங்கை கிரிக்கட் குழாமில் விஜயகாந்த் விஸ்காந்த்துக்கு அடுத்தபடியாக இலங்கை அணிக்குள் இணைந்த தமிழ் பேசும் வீரராக முகமது சிராஸ் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.