மோடி தற்போது வலிமை, புகழ் ஆகியவை குறைந்து காணப்படுகிறார்! பிரசாந்த் கிஷோர்
1 ஐப்பசி 2024 செவ்வாய் 03:16 | பார்வைகள் : 605
3வது முறையாக பிரதமராகி உள்ள மோடி தற்போது வலிமை, புகழ் ஆகியவை குறைந்து காணப்படுகிறார் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.
தேர்தல்களில் வெற்றி பெற தேவையான வியூகங்களை வகுப்பதில் வல்லவராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை நாளை(அக்.2) தொடங்குகிறார். காந்திய வழியில் தமது அரசியல் பயணம் இருக்கும் என்று கூறி உள்ள அவர், தமது கட்சிக்கு ஜன் சுராஜ் என்று பெயர் வைத்துள்ளார்.
இந் நிலையில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறி இருப்பதாவது; 3வது முறையாக பதவி வகித்து வரும் பிரதமர் மோடி வலிமை குறைந்து காணப்படுகிறார். அவருக்கான புகழ் குறைந்துவிட்டது. அவரின் அரசியல் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் பார்த்துவிட்டனர். எனவே அவரின் புகழ் குறையும் என்று முன்னரே கூறி இருக்கிறேன்.
2014ம் ஆண்டு தேர்தலில் பீகாரில் 30 தொகுதிகளும், 2019ம் ஆண்டு தேர்தலில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.வை மக்கள் வெற்றி பெற வைத்தனர். இந்த முறை அவர்கள் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றனர். ஆனால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதா என்பதை பார்க்க வேண்டும்.
அடுத்த இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகளில் 9 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அதன் முடிவுகள் பா.ஜ.,வுக்கு எதிராக இருந்தால் அரசின் ஸ்திரத்தன்மை மீது கேள்விகள் எழும். காங்கிரசை பொறுத்த வரையில் முன்பை விட அக்கட்சி தற்போது முன்னேற்றமான பாதையை நோக்கி செல்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் ராகுல் உழைத்திருக்கிறார். எனவே அதற்கான பலன்களை பெற்று வருகிறார். ஆனால் ஒரு தலைவராக அவர் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.