சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் நன்மை! காஷ்மீர் தேர்தலில் ஓட்டளித்த மக்கள் கருத்து!!
2 ஐப்பசி 2024 புதன் 03:33 | பார்வைகள் : 627
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேர்தலில் முதல்முறையாக ஓட்டளித்த, பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்து அகதிகள், 'கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பறவை விடுவிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீரில், 10 ஆண்டுகளுக்கு பின் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. 24 தொகுதிகளுக்கு, செப்., 18ல் நடந்த முதற்கட்ட தேர்தலில், 61.38 சதவீத ஓட்டுகளும்; 26 தொகுதிகளுக்கு, செப்., 25ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 57.31 சதவீத ஓட்டுகளும், மூன்றாம் மற்றும் கடைசி கட்ட தேர்தலில், 68.72 சதவீத ஓட்டுகளும், பதிவாகின.
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தலில் முதல் முறையாக, பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்து அகதிகள், வால்மீகிகள், கூர்க்காக்கள் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர். மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சம்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
தேர்தலில் முதல்முறையாக ஓட்டளித்த, பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்து அகதிகள் கூறியதாவது: 'கூண்டில் அடைக்கப்பட்டுள்ள பறவை விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளாக எங்கள் சமூகத்திற்கு ஓட்டளிக்கும் உரிமை இல்லை' என தெரிவித்தனர்.
மோடிக்கு நன்றி!
ஹிந்து அகதிகள் தலைவர் லாப ராம் காந்தி கூறியதாவது: சட்ட பிரிவு 370ஐ ரத்து செய்து, எங்களை காஷ்மீர் குடி மக்களாகவும் வாக்காளர்களாகவும் மாற்றிய பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 75 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் தேவையற்ற குடிமக்களாக வசித்து வந்த நாங்கள், வரலாற்றில் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் பங்கேற்கிறோம். இப்போதுதான் எங்கள் கனவு நிஜமாகியுள்ளது. நாங்கள் இப்போது ஜம்மு காஷ்மீரின் குடிமக்கள் மற்றும் வாக்காளர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மிக்க மகிழ்ச்சி!
காஷ்மீரில் நடந்த இறுதி கட்ட தேர்தலில் முதல் முறையாக ஓட்டளித்த 50 வயதான நபர் கூறியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு 50 வயது ஆகிறது. நான் இப்பொழுது முதல் முறையாக ஓட்டளித்து உள்ளேன். மேற்கு பாகிஸ்தான் அகதிகள், வால்மீகிகள் மற்றும் கூர்க்கா சமூகத்தினர் இப்போது வாக்களிக்க முடியும். இப்போது பல விஷயங்கள் மாறி வருகின்றது என்றார்.