Paristamil Navigation Paristamil advert login

மக்களை ஏமாற்றவில்லை; வாரிசுக்கு பதவி தரவில்லை; சீமான்

மக்களை ஏமாற்றவில்லை; வாரிசுக்கு பதவி தரவில்லை; சீமான்

2 ஐப்பசி 2024 புதன் 14:16 | பார்வைகள் : 792


காமராஜர் மது விற்று அரசை நடத்தவில்லை; இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை. குடும்பத்து வாரிசுகளுக்கு பதவிகொடுக்கவில்லை' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

அவரது அறிக்கை:
எழுத்தறிவித்த இறைவன் காமராசர் நினைவைப்போற்றுவோம். தமிழகத்தில் மூடப்படவிருந்த 6, ஆயிரம் பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு, மேலும் 12000 பள்ளிகளைத் துவங்கி வைத்து, இலவச மதிய உணவு கொடுத்து ஏழைக் குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்.

தமிழகத்தின் முக்கிய அணைகளை கட்டியதோடு 33000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழிசெய்த பெருந்தகை. 18க்கும் மேற்பட்ட மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்கி தொழில்வளர்ச்சிக்கு வித்திட்டவர். நாட்டு மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டே இத்தனை சாதனைகள் செய்த ஆட்சியில் ஒரு துளி மது இல்லை; மது விற்று அரசை நடத்தவில்லை.

ஏமாற்றவில்லை
இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை. நாட்டின் விடுதலைக்கு 8 ஆண்டு சிறை ஈகம் புரிந்த காமராசர், 15 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர், 14 ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவர், 9 ஆண்டு தமிழக முதல்வர், 8 ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர், 3 ஆண்டு அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர்.

2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைத்தலைவர், எத்தனை எத்தனை பதவிகள் வகித்தபோதும் ஒற்றை ஊழல் முறைகேடு புகார் இல்லை. கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை, குடும்பத்து வாரிசுகளுக்கு பதவிகொடுக்கவில்லை.

தடுமாறிபோனது
உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழகத்தினை முன்னேற்றிய தனிப்பெருந்தலைவரின் ஆட்சி காலத்தில் நாங்கள் வாழவில்லையே என்ற ஏக்கம் நெஞ்சில் நிழலாடுகிறது. அரசியல் தூய்மைக்கு, அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கு வரைவிலக்கணமாய், தன்னலம் கருதாது வாழ்ந்த தன்னிகரற்ற தலைவனை தமிழகம் தோற்கடித்த பிறகுதான் தடுமாறிபோனது; தடம்மாறிப் போனது.

நேர்மை, எளிமை
இன்றுவரை அவ்வரலாற்று பிழையிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. காமராசர் நினைவைப் போற்றுகிற இந்நாளில், வழிவழியே வருகிற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப்போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதி ஏற்போம். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்