எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
9 புரட்டாசி 2024 திங்கள் 16:46 | பார்வைகள் : 813
புற்றுநோய் சிகிச்சைக்கான செலவை மேலும் குறைக்கும் வகையில், புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5% குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
54-வது ஜி.எஸ்.டி.,கவுன்சில் கூட்டம் இன்று டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா, மேகாலயா மாநில முதல்வர்கள், அருணாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநில துணை முதலமைச்சர், பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியது,
* ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் வருவாய் 6 மாதங்களில் அதிகரித்து ரூ.6909 கோடியாக உள்ளது
* மத்திய அரசின் சட்ட விதிகளின் படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள், மாநில அரசுகளின் சட்ட விதிகளின் படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அரசு மற்றும் தனியாரிடமிருந்து, வரி விலக்கு பெற்றவர்களிடம் இருந்து ஆராய்ச்சி நிதியைப் பெறலாம் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* ஐஜிஎஸ்டியில் எதிர்மறையான சமநிலை இருப்பதால் இது தொடர்பாக, இறுதி முடிவை எடுக்க வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் தலைமையில்,மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்
* புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான செலவை மேலும் குறைக்கும் வகையில் இது 12%லிருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது.
* வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவும், அதற்கான வட்டியை செலுத்தவும் நீட்டிக்கப்பட்ட இழப்பீடு செஸ் வசூலிக்கப்படுகிறது. அநேகமாக ஜனவரி 2026 ஆண்டுக்குள் கடன் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துவோம்.
எனவே மார்ச் வரை இழப்பீடு செஸ் வரி நடைமுறையில் இருக்கும். ஆனால் இழப்பீட்டு செஸ் மார்ச் 2026 க்குள் முடிவடைகிறது.
* செஸ் வசூல் மார்ச் 2025 வரை 8,66,706 கோடி ரூபாயாக இருக்கும். செப்டம்பர் 5ஆம் தேதி 2024 வரை வழங்கப்பட்ட இழப்பீடு மைனஸ் 6,64,203 ஆகும். திருப்பிச் செலுத்த வேண்டிய கடனானது மைனஸ் 2,69,208 ஆகவும் உள்ளது.
* மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீத வரியை குறைப்பது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் எவ்வளவு மற்றும் அதற்கான நடைமுறைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்காக 2 புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* நம்கீன் எனப்படும் பிராண்டட் நொறுக்கித் தீனிகள் மீதான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 12% ஆகக் குறைக்கப்படுகிறது” என்றார்.