Paristamil Navigation Paristamil advert login

ஆரம்பத்தில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் எப்படி இருக்கும்?

ஆரம்பத்தில் புற்றுநோய்க்கான அறிகுறிகள்  எப்படி இருக்கும்?

15 புரட்டாசி 2024 ஞாயிறு 11:58 | பார்வைகள் : 1069


உலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய். 2020ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். அதிலும் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் விந்துப்பை புற்று நோய் ஆகியவை பெரும்பாலான நபர்களை தாக்கக்கூடிய புற்றுநோய் வகைகளாக உள்ளன. புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய தடையாக இருப்பது நோய் கண்டறிதல் ஆகும். புற்றுநோய் செல்கள் இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சிகிச்சைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை புற்றுநோய் செல்கள் அடைந்து விடுகின்றன. ஆகவே புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே பெண்கள் மற்றும் ஆண்களில் பெரும்பாலும் அலட்சியமாக கருதப்படும் ஒரு சில புற்றுநோய் அறிகுறிகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்

சோர்வு: சோர்வு என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நபர்களால் அனுபவிக்கப்படும் ஒரு அறிகுறி ஆகும். புற்றுநோயானது ஒரு நபரை மிகவும் வலுவிழக்கச் செய்து, ஆற்றலை உறிஞ்சி விடுகிறது. இந்த சோர்வானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் ஒரு நபர் படுக்கையில் இருந்து எழுவதற்குக்கூட சிரமப்படலாம். சாப்பிடுவதற்கு, கழிப்பறைக்கு நடந்து செல்வது அல்லது டிவி ரிமோட்டை பயன்படுத்துவதற்கு கூட கடினமாக இருக்கும். ஓய்வு ஓரளவுக்கு உதவி புரிந்தாலும், இந்த சோர்வை முழுவதுமாக போக்குவது கடினம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சோர்வானது வலி, குமட்டல், வாந்தி அல்லது மனச்சோர்வு போன்றவற்றையும் கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

உடல் எடை குறைதல்: உடல் எடை குறைவது புற்றுநோய்க்கான முதல் அறிகுறி ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக பலர் இதனை அலட்சியமாக தவிர்த்து விடுகின்றனர். எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீரென உங்கள் உடல் எடை குறையும்போது, கட்டாயமாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

உடலில் தடிப்புகள் தோன்றுதல்: லூகேமியா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சருமம் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் உடல் முழுவதும் தடிப்புகள் காணப்படும். சருமத்திற்கு தோளுக்கு அடியில் இருக்கக்கூடிய சிறு சிறு ரத்த நாளங்கள் உடைவதால் இந்த தடிப்புகள் உண்டாகிறது. ரத்த செல்களின் அமைப்பில் சமநிலை இல்லாத காரணத்தால் சருமத்தில் ஏராளமான மாற்றங்கள் தோன்ற துவங்குகிறது. ஆகவே இதுபோன்ற அறிகுறிகளையும் ஒருவர் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது.

கண்களில் வலி: கண்களை யாரோ குத்திவிட்டது போன்ற கடுமையான வலி தோன்றுவது, கண்களில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான முக்கியமான ஒரு ஆரம்ப அறிகுறி. இந்த அறிகுறிகளை பெரும்பாலான நபர்கள் தவிர்த்து விடுகின்றனர்.

அடிக்கடி தலைவலி: ஆரம்பத்தில் லேசாக இருந்த தலைவலி படிப்படியாக அதிகரித்து வருமானால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் ஆகவே வழக்கத்திற்கு மாறான தலைவலியை அனுபவிக்கும் நபர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது அவசியம். ஏனெனில் இது பிரைன் ட்யூமரின் ஆரம்ப அறிகுறியாகும்.

வலியுடன் கூடிய மாதவிடாய்: வழக்கமாகவே மாதவிடாய் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி வலி மிகுந்த ஒரு நிகழ்வு தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான ரத்த ஓட்டத்துடன் கூடிய, உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத வலியை அனுபவித்தீர்களானால் கட்டாயமாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. ஏனெனில் இது என்டோமெட்ரியல் கேன்சருக்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

மார்பகத்தில் மாற்றங்கள்: ஆண்களைக் காட்டிலும் பெண்களில் மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மார்பக புற்றுநோய் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவ்வப்போது பெண்கள் தங்களது மார்பகத்தை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். முலைக்காம்பு அல்லது மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள் தோன்றுமாயின் உடனடியாக அதனை மருத்துவரிடம் தெரிவித்து தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம். முலைக்காம்புகள் வடிவத்தில் மாற்றம், உள்நோக்கி அல்லது பக்கவாட்டில் திரும்பியவாறு காணப்படுதல் போன்றவை மார்பக புற்றுநோய்க்கான ஒரு சில அறிகுறிகள் ஆகும்

தெரிந்து கொள்ள வேண்டிய பிற அறிகுறிகள்: மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகளைத் தவிர புற்றுநோய்க்கான வேறு சில அறிகுறிகள் என்னவெனில் பிறப்புறுப்பில் வீக்கம், சாப்பிடுவதற்கு மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம், செரிமான பிரச்சனைகள், சுவாசிக்க சிரமப்படுதல், வயிற்று உப்புசம், மலம் கழிப்பதில் மாற்றங்கள், சிறுநீர் கழிக்கும் போது வலி, காய்ச்சல் மற்றும் நகங்களில் மாற்றங்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்