ஹமாஸ் தாக்குதல் தொடர்பில் இளம்பெண் விமர்சனம்
31 ஐப்பசி 2024 வியாழன் 13:40 | பார்வைகள் : 698
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து பாலஸ்தீனிய மாணவி ஒருவர் தெரிவித்த கருத்துக்களுக்காக, அவரை நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டமிட்டுள்ளது.
ஆனால், அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய, அவருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்றனர்.
அதற்கு மறுநாள், பிரித்தானியாவிலுள்ள மான்செஸ்டர் பல்கலையில் சட்டம் பயிலும் பாலஸ்தீனிய மாணவியான டானா (Dana Abuqamar, 19), பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.
அந்தப் பேரணியில் உரையாற்றிய அவர், நடந்த விடயத்தால் நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
16 ஆண்டுகளாக காசா தாக்குதலுக்குள்ளாகிவரும் நிலையில், நவயுக வரலாற்றில், முதன்முறையாக இப்படி நடந்துள்ளது.
முதன்முறையாக அவர்கள் எதிர் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள், இது ஒரு வாழ்நாள் அனுபவம் என்று கூறிய டானா, இஸ்ரேல் எப்படி பதிலடி கொடுக்கும் என்ற பயம் எங்களுக்கு உள்ளது, அதே நேரத்தில், நாங்கள் மிகவும் கௌரவமாக உணர்கிறோம், நடந்ததை அறிந்து முழு மகிழ்ச்சியில் திளைக்கிறோம் என்று கூறினார்.
டானாவின் கருத்துக்களுக்காக அவரது மாணவர் விசாவை ரத்து செய்த பிரித்தானிய உள்துறை அலுவலகம், டானாவால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிவித்ததுடன், அவரை நாடுகடத்தவும் திட்டமிட்டது.
அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசிய டானா, தனது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியா அரசு தனது மனித உரிமைகளை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், ஒரு 19 வயது வயது மாணவியான தான் பள்ளிக்குச் செல்வது, சமூக நீதிக்காக குரல் கொடுப்பது, தனது சமுதாயத்துக்கு மதிப்புமிக்க ஒருவராக இருக்க முயல்வது தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றும், தன்னைப்போய் பிரித்தானிய அரசு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறுவது அடிப்படையற்ற வாதம் என்றும் கூறியிருந்தார் அவர்.
அத்துடன், அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் டானா.
இந்நிலையில், டானா பிரித்தானியாவில் இருப்பதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறியதை நிரூபிக்க உள்துறை அலுவலகம் தவறிவிட்டதாக மேல் முறையீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உள்துறை அலுவலகத்தின் முடிவு, ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தின் கீழ், டானாவின் பாதுகாக்கப்பட்ட பேச்சுரிமையில் விகிதாசாரமற்ற குறுக்கீடு என்றும் தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது.
டானாவின் கருத்துக்கள், அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலுக்கு ஆதரவானவை என எடுத்துக்கொள்ளமுடியாது என்றும் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.