திருமலையில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்: புதிய தலைவர் அதிரடி
1 கார்த்திகை 2024 வெள்ளி 05:07 | பார்வைகள் : 1092
திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்,'' என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டனர்.
ஆந்திராவில், 'டிவி5' என்ற 24 மணி நேர செய்தி தொலைக்காட்சியை நடத்தி வரும் பி.ஆர்.நாயுடு, வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு துறைகளை சேர்ந்த 24 பிரமுகர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய பி.ஆர்.நாயுடு கூறியதாவது:
திருமலை திருப்பதி கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பல பிரச்னைகள் உள்ளன. அவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஏற்கனவே பணியில் இருக்கும் ஹிந்து அல்லாத ஊழியர்களை அரசின் பிற துறைகளுக்கு மாற்றுவதா அல்லது அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதா என்பது குறித்து ஆந்திர அரசுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
கடந்த ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சியில் திருமலையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. கோவிலின் புனிதத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும்.
என் கடமையை நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.