அமித்ஷா மீதான கனடாவின் குற்றச்சாட்டு கவலையளிக்கிறது : அமெரிக்கா கருத்து
1 கார்த்திகை 2024 வெள்ளி 05:13 | பார்வைகள் : 1147
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் விவகாரத்தில், இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கனடாவின் குற்றச்சாட்டு கவலையளிக்கிறது' என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார், 2023ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனால் இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் இது தொடர்பாக பேசிய கனடா வெளியுறவுத் துறை இணையமைச்சர் டேவிட் மோரிசன், 'கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையைத் துாண்ட, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். நான் அதை உறுதி செய்தேன்' என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று கூறுகையில், “அமித்ஷா மீது கனடா புகார் தெரிவித்துள்ளது கவலை அளிக்கிறது. இது தொடர்பாக கனடா நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்,” என்றார்.