இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி: அதிரடியில் மிரட்டிய எவின் லூயிஸ்!
1 கார்த்திகை 2024 வெள்ளி 10:21 | பார்வைகள் : 879
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆன்டிகுவா மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 48 ஓட்டங்களும், சாம் கர்ரன் 37 ஓட்டங்களும் குவித்தனர். பந்துவீச்சை பொறுத்தவரை மோட்டி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.
தொடக்க வீரராக களமிறங்கிய எவின் லூயிஸ் 69 பந்துகளில் 94 ஓட்டம் குவித்து அசத்தினார். மற்றொரு தொடக்க வீரரான பிராண்டன் கிங் 30 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
மழையின் குறுக்கீட்டால் DLS முறைப்படி வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 25.5 ஓவர்கள் முடிவிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.