அசிடிட்டியில் இருந்து நிவாரணம் பெற உதவும் வீட்டு வைத்தியங்கள்
13 ஐப்பசி 2024 ஞாயிறு 14:00 | பார்வைகள் : 979
நீங்கள் அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்படுபவர் என்றால் கவலைப்படாதீர்கள். சில எளிய இயற்கையான வீட்டு வைத்தியம் மூலம் அசிடிட்டி சிக்கலில் இருந்து விரைவாக நிவாரணம் பெறலாம். அதே நேரம் நீங்கள் அடிக்கடி அசிடிட்டியால் பாதிக்கப்பட்டு வந்தால் காரமான உணவுகளை தவிர்ப்பது, குறைவாக எடுத்து கொள்வது மற்றும் அவ்வப்போது தேவைக்கேற்ப சிறிது சிறிதாக சாப்பிடுவது போன்ற சில மாற்றங்களை செய்வது நல்லது.
வயிறு அதிகப்படியான ஆசிட்டை உற்பத்தி செய்யும் போது அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது. நாம் செய்யும் பல விஷயங்கள் மற்றும் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் அசிடிட்டியை தீவிரமாக்கலாம்.
மிகவும் காரமான அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை எவ்வளவு விரும்பி சாப்பிடுகிறோமோ, அந்தளவு அவை வயிற்று ஆரோக்கியத்தை சீர்குலைத்து ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.
தேவையை விட அதிகமாக சாப்பிடுவது வயிற்றை ஸ்ட்ரெச் செய்து அசிடிட்டியை தூண்டுகிறது.சாப்பிட்ட உடனேயே நாம் அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைப்பது சிறிது நேரம் படுத்துக்கொள்ளலாம் என்பதே. ஆனால் சாப்பிட்ட பிறகு உடனே படுப்பதால் வயிற்றிலிருந்து நம் தொண்டைக்குள் ஆசிட் ஏற கூடிய சூழல் உருவாகிறது.
மன அழுத்தம் நம் செரிமான ஆரோக்கியத்தை பாதித்து அதிக ஆசிட் உற்பத்தியாக வழிவகுக்கிறது.
அசிடிட்டி ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்களை மேலே தெரிந்து கொண்டோம். அசிடிட்டிக்கு நிவாரணம் அளிக்க கூடிய சில இயற்கை வைத்தியங்களை இனி பார்க்கலாம்.
பெருஞ்சீரக விதைகள் செரிமான செயல்முறையை சிறப்பாக வைத்திருக்க தேவையான சில அதிசயங்களை செய்கின்றன. வயிற்றை அமைதிப்படுத்தி அதிக ஆசிட் உற்பத்தியை பெருஞ்சீரக விதைகள் குறைக்கின்றன. எனவே சாப்பிட்ட பின் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிடுவது வயிற்றில் சுரக்கும் ஆசிட்டை சமன் செய்து, உப்புசத்தை குறைக்கிறது. இல்லை என்றால் ‘பெருஞ்சீரகம் டீ’ தயாரித்து பருகுவதும் அசிடிட்டிக்கு தீர்வாகும்.
இயற்கையின் ஆன்டாக்சிட்டாக வாழைப் பழங்கள் உள்ளன. இவை நம்மை ஆசிடிட்டியிலிருந்து பாதுகாக்கிறது. நீங்கள் அசிடிட்டியால் மிகவும் எரிச்சலாக உணர்ந்தால், ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.
இஞ்சி செரிமான நன்மைகளை அளிக்க கூடியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதுதவிர அசிடிட்டியை குறைக்கவும், வயிற்றை அமைதிப்படுத்தவும் இஞ்சி உதவுகிறது. அசிடிட்டிக்கு நிவாரணம் பெற நீங்கள் இஞ்சி டீ குடிக்கலாம் அல்லது ஒரு சிறிய துண்டு இஞ்சியை மென்று சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.
நல்ல செரிமானம் மற்றும் அசிடிட்டி பிரச்சனையை போக்க உதவும் ஒரு பாரம்பரிய தீர்வாக ஓமம் இருக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் வாயுவை தடுக்கும் கலவைகளால் ஓமம் நிரம்பியுள்ளது. அசிடிட்டியிலிருந்து விரைவான நிவாரணம் பெற, ஒரு சிட்டிகை ஓமத்தை சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து பானமாக குடிக்கலாம்.
அசிடிட்டிக்கு விரைவான தீர்வு குளிர்ந்த பால் ஆகும். இது வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நடுநிலைபடுத்தும். மேலும் உங்கள் நெஞ்சு எரிச்சல் உணர்வை குறைக்கும். ஒரு கிளாஸ் குளிர்ந்த பால் எடுத்து கொள்வது (சர்க்கரை இல்லாமல்) விரைவான நிவாரணம் பெற மற்றும் வயிற்றை அமைதிப்படுத்த உதவும்.