Paristamil Navigation Paristamil advert login

லண்டனில் களைகட்டும் யாழ். பல்கலையின் பொன்விழா ஏற்பாடுகள்

லண்டனில் களைகட்டும் யாழ். பல்கலையின் பொன்விழா ஏற்பாடுகள்

18 ஐப்பசி 2024 வெள்ளி 13:36 | பார்வைகள் : 1498


லண்டனில் எதிவரும் நவம்பர் 30 ம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக பிரான்ஸ், லண்டன், சுவிஸ், நோர்வே மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் வாழும் யாழ் பல்கலைக்கழகத்தின் பழையாமாணவர்கள் LIFT அமைப்புடன் இணைந்து ஒழுங்கமைத்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டம் எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி இலண்டனில் நடைபெற இருக்கிறது. 

LIFT அமைப்பு பல்கலைகழக ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்யும் நோக்கோடு யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் குழுவினால்  ஆரம்பிக்கப்பட்ட  அறக்கட்டளை நிறுவனமாகும். 

குறிப்பாக எமது தமிழ்ப்பிரதேசங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கான பிரத்தியேக நிதிமூலமாக செயற்படும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரையில் பல ஆய்வுகளுக்கு தனது பங்களிப்பை செய்துள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களும் இந்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கிறார்கள். 

1974ம் ஆண்டு எமது கல்விமான்களதும் அரசியல் பிரமுகர்கள் சிலரதும் முழுமுயற்சியினால், அன்றைய இலங்கை பிரதமரினால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் பின்னர் தனித்த பல்கலைக்கழகமாகி தனக்கேயுரிய  மெருமைகளோடு இன்று பொன்விழா கண்டு நிற்கிறது. 

இந்த வேளையில் அதன் பழைய மாணவர்களாக நாமும் அதன் உரித்துடையவர்களாக எமது மக்களும் பெருமையோடு இண்டனில் இந்த விழா ஏற்பாடுகளை செய்துள்ளோம். 

எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி இலண்டன்  நகரத்தில் Slough என்ற இடத்தில் உள்ள New Crystal Banquet Hall  மணடபத்தில் பொன்விழா நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இயல் , இசை நாடகம் உள்ளடங்கிய கலைநிகழ்ச்சிகளுடன் பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடலாக இந்நிகழ்வு அமைய இருக்கிறது. இலங்கை தமிழ் சமூகத்தின் சொத்துக்களில் ஒன்றான எமது பல்கலைக்கழகத்தின் 50 வருட சாதனைப் பெருமிதத்துடன்  சங்கமிக்க பொதுமக்கள், நலன்விரும்பிகள், பழையமாணவர்கள், என அனைவருக்கும்  அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.

இந்த நிகழ்வில் , எமது பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டை பிரதிபலிக்கும் பதிவு நூல் ஒன்றையும் வெளியிட ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்திருக்கிறார்கள். 

இந்த நூலுருவுக்கான கட்டுரையாக்கங்களை பல்கலைக்கழக பழைய மாணவர்கள், அவர்களின் பிள்ளைகள், முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறார்கள். கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிமூலங்களில் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகளை எழுதுபவர்கள் uojuk50@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரியூடாக எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைப்பதன் மூலம் நூலுருவாக்கத்திற்கு உங்கள் பங்களிப்பை செய்ய முடியும்.

நீங்கள் சமர்ப்பிக்கும் கட்டுரைகள் எமது பல்கலைக்கழகத்தின் தோற்றம் , வளர்ச்சி, மற்றும் பல்கலைக்கழகம் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள், சமூக மாற்றத்தில் அதன் பங்கு , பரிமாணங்கள் என்பன உள்ளடங்கியதாக அல்லது பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையதாக அமைந்திருத்தல் சிறப்பு. 

அது மட்டுமன்றி எமது பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களாக உங்களது தனிப்பட்ட அனுபவங்கள் , உள்நுளைந்தபோது இருந்த எதிர்பார்ப்புகள், தேவைகள், காரணிகள் என பிரத்தியேகமாக பகிரக்கூடிய விடயங்களையும் கூட நீங்கள் ஆக்கங்களாக உருமாற்ற முடியும்.

எமது பல்கலைக்கழகமும் அதன் சூழலும் உங்களில் ஏற்படுத்திய சிந்தனை மாற்றங்கள், அவை பூர்த்திசெய்த உங்களின் எதிர்பார்ப்புகள் கனவுகள்பற்றியும் கூட நீங்கள் பகிரமுடியும். இன்னும் கூடுதலாக, எமது பல்கலைக்கழகம் இனிவரும் காலங்களில் கல்விப்பணியில் முன்னெடுக்க வேண்டிய அல்லது செய்ய வேண்டும் என நீங்கள் நினைப்பவற்றையும் பரிந்துரக்க இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது வெள்ளிடை மலை.

கட்டுரைகளின் களம் நீங்கள் சார்ந்த துறைகள் சார்ந்ததாகவோ பொதுவானவையாகவோ இருக்கலாம். எனினும் தரவுகளின் உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்தி, உறுதிசெய்து எழுத்துவது பல்கலைகழகத்தின் ஆவணமாக பார்க்கப்படும் இந்நூலுக்கு சிறப்பு சேர்க்கும் என நூலுருவாக்க குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.

இது தவிர எமது மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பேருவகையையும் உருவாக்கியுள்ள நவம்பர் 30 கொண்டாட்ட நிகழ்வு ஒரு மிகவும் முக்கியமான வரலாற்று நிகழ்வு என்பதையும் நாம் இங்கே குறிப்பிட்ட வேண்டும். ஏனெனில் எமது பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றவர்கள் முதல் கடந்த வருட பட்டமளிப்பு விழவில் பட்டம் பெற்று வெளியேறியவர்கள் வரை எல்லோரையும் எம்மால் ஒன்றிணைக்க முடிந்துள்ளது. 

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் எமது பழைய மாணவர்கள் பரந்து மிகவும் குறுகிய எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதும் , தம்மிடையே தொடர்புகள் குறைந்திருந்ததாலும் வலுவான ஒரு கட்டமைப்பை செய்ய வாய்த்திருக்கவில்லை. எனினும் இந்த நிகழ்வு எங்கள் எல்லோரையும் ஒருங்கிணைய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருகிறது. 

அந்த வகையிலும் இந்த நிகழ்வு எமக்கு மிக முக்கியமான ஒன்று என்றால் அது மிகையில்லை.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் , இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சார்பிலும் LIFT  அறக்கட்டளை அமைப்பின் சார்பிலும் எமது பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் , பொதுமக்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொன் விழா பற்றிய மேலதிக விபரங்களுக்கு, +33 6 51 47 50 83 அல்லது +44 79404 08771 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்