இந்தியாவில் கார் சென்சார்கள் தயாரிக்க ISRO திட்டம்
26 கார்த்திகை 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 2174
இந்தியாவிலேயே கார்களுக்கு தேவையான சென்சார்களை தயாரிக்க ISRO திட்டமிட்டுள்ளதாக எஸ். சோமநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவர் எஸ். சோமநாத், கார்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.
ரொக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களுக்கான சென்சார்களை தயாரியப்பது மிகவும் கடினம், அவற்றையே ISRO சொந்தமாக உள்நாட்டில் தயாரிக்கிறது. அப்படி இருக்கும்போது, கார்களுக்கான சென்சார்களை தயாரிப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதனால், கார் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த செலவில் சென்சார்கள் வழங்குவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது.
இந்நிலையில், ISRO இந்த துறையில் கார் உற்பத்தியாளர்களுடன் ஒத்துழைக்க அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் சென்சார்கள் தயாரிக்கப்படுவது உள்நாட்டின் மின்சார வாகன (EV) மற்றும் கார் தொழில்துறைக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இதனால் வாகன உற்பத்தி செலவுகள் குறைந்து, புது தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.
கார் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சியை இந்த முயற்சி வேகமாக்கும் என தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என கூறுகின்றனர்.
ISRO ஏற்கனவே பல்வேறு வெளிநாட்டு பாகங்களை உள்நாட்டில் தயாரித்து, அதை உலகளவில் ஏற்றுமதி செய்கிறது.
தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் ISRO, வாகன சென்சார் துறையில் புதிய முன்னேற்றத்தை கொண்டு வரவுள்ளது.
இந்த முயற்சி, கார் தொழில்துறையில் இந்தியாவின் தன்னிறைவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.