கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர்: வி.சி., காரசாரம்

13 மாசி 2025 வியாழன் 03:21 | பார்வைகள் : 2952
தி.மு.க.,வுடனான கூட்டணி பங்கீட்டில், கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்தவர் பிரசாந்த் கிஷோர்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாவலன் அறிக்கை:
பிரசாந்த் கிஷார் - விஜய் சந்திப்பு, என்ன வேடம் கட்டினாலும், ஆட்டம் எடுபடாது. வியூகம் என்பது குறளி வித்தை. தேர்தல் வியூகம் என்பதெல்லாம் ஒரு மாயை. வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர், பீஹார் தேர்தலில் பல தொகுதிகளில், 'டிபாசிட்' தொகையைக் கூட பெற முடியாமல், அதள பாதாளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த வியூக வண்டி. தேர்தல் வியூகம் என்பது குறுக்கு வழி; மக்களை ஏமாற்றும் வழி; ஜாதி அடிப்படையிலான ஓட்டுகளை நியாயப்படுத்தும் வழி.
கடந்த, 2021ல் தி.மு.க., வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் காரணம் என்றால், 2024 லோக்சபா தேர்தல் வெற்றிக்கு யார் காரணம்? வியூகம் என்பது ஒன்றும் கிடையாது. வேலையில்லா இளைஞர்களை வைத்துக்கொண்டு, கட்சிகளிடம் பணம் பறிக்கும் வேலை.
தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுகிறது என்றால், கொள்கை சார்ந்து வலுவான கூட்டணி அமைத்தது தான் காரணம்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளில் காங்கிரசை தவிர, மற்ற கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஆறு தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக்கூடாது என, கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெரித்துவிட்டு சென்றவர். வியூகத்தை நம்பாமல், கொள்கையோடு மக்களை நாடினால் மட்டும் வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.