Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

19 மாசி 2025 புதன் 02:55 | பார்வைகள் : 2329


தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 2023 மார்ச்சில் இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் வரை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவே, இந்த நியமனங்களை செய்யும்' என, நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு, தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் முடிவு எடுக்கும் வகையில், 2023 இறுதியில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டதால், இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

கடந்தாண்டு மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது.

இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ராஜிவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து, அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.

இதைத் தவிர, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி விவேக் ஜோஷி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை அவசரமாக விசாரிக்க வேண்டும் என, நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோட்டீஸ்வர் சிங் அமர்வில் நேற்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஏற்கனவே பட்டியலிடப்பட்டபடி, அந்த மனுக்களை இன்று விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது.

நான் சொன்னதை கேட்கவில்லை: ராகுல்

இது குறித்து காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியதாவது:தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் உள்ளது. அதனால், தற்போதைக்கு இந்த நியமனத்தை ஒத்தி வைக்கும்படி கூறினேன்; அது ஏற்கப்படவில்லை.மேலும், நியமனம் தொடர்பாக நள்ளிரவில் கூட்டம் நடத்தி, பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் அவமதித்துள்ளனர். அவ்வளவு அவசரம் காட்ட வேண்டியது ஏன்?இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு மறுப்பு தெரிவித்து, பா.ஜ., வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியதாவது:உச்ச நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவை இவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, பார்லிமென்டில் சட்டம் கொண்டு வரும் வரை, இடைக்கால ஏற்பாடாகவே, தேர்வு குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தற்போது மிகவும் வெளிப்படையாகவும், சட்டங்களுக்கு உட்பட்டுமே நியமனங்கள் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


இன்று பதவியேற்பு!

தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஞானேஷ் குமார், இன்று பதவியேற்கிறார். கேரள கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், கடந்தாண்டு ஜனவரியில் பணி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, மார்ச்சில் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். வரும், 2029 ஜன., வரை அவர் தலைமை தேர்தல் கமிஷனராக இருப்பார். அந்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவர் ஓய்வு பெறுவார். கேரள அரசில் பல நிலைகளில் பணியாற்றியுள்ள ஞானேஷ் குமார், மத்திய அரசில் உள்துறை செயலராகவும் பணியாற்றினார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அறக்கட்டளை அமைப்பு போன்றவற்றில் இவரது பங்களிப்பு முக்கியமானதாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்