காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை

8 மாசி 2025 சனி 10:16 | பார்வைகள் : 2391
காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இனச்சுத்திகரிப்பு குறித்து எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை பயன்படுத்துவது என்பது பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் மனிதர்களாக வாழ்வதற்கான உரிமை பற்றியது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்த உரிமைகள் சாத்தியமாவது எட்டாத தூரத்தில் கைநழுவிகொண்டிருப்பதை பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு இனக்குழுவை அச்சம்தரும்வகையில் ,திட்டமிட்ட முறையில் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துவதை பூதாகரமானவர்களாக சித்தரிப்பதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காசாவில் போரை ஆரம்பித்துவைத்த ஹமாசின் தாக்குதலை எதுவும் நியாயப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பழிவாங்கும் விதத்தில் இஸ்ரேல் காசாவை இடைவிடாமல் தாக்கியபோது ஏற்பட்டுள்ள அழிவையும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பயங்கரங்களையும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிரம்பின் யோசனை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என குறிப்பிட்டுள்ளார்.