தமிழகத்தில் பா.ஜ. ஆட்சியில் மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும்

13 பங்குனி 2025 வியாழன் 12:29 | பார்வைகள் : 1524
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி வந்ததும் மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ. 2500 வழங்கப்படும். மாவட்டம் தோறும் இரண்டு நவோதயா பள்ளிகள் காமராஜர் பெயரில் துவக்கப்படும் என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தீய சக்திகளை வேரறுப்போம் என்ற தலைப்பில் பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது.திருநெல்வேலி எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தென்காசி மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட பெருமைக்குரியது. அத்தகைய தேசியவாதிகளின் மண்ணாக இருந்த தென்காசியில் பா.ஜ., வளர்ச்சி துவங்கியுள்ளது. இப்போது 5 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றிபெற உறுதியாக செயல்படும்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். சர்வதேச விளையாட்டு வீரர் சதீஷ்குமார் இன்று பா.ஜ.,வில் இணைந்துஉள்ளார். தமிழ்நாட்டை, குடும்பங்களை பாதுகாக்க 2026ல் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும்.
தி.மு.க., ஆட்சி மக்கள்நிம்மதியை குலைத்துவிட்டது. பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் குழந்தைகளை கூட பெற்றோர் சந்தேகப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் எதிலும் லஞ்சம். லஞ்சம் வாங்குவதை பெருமையாக கருதும் அரசு உள்ளது.சிறைக்கு சென்று வந்த அமைச்சர்கள் தங்களை காந்தியாக நினைத்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. தகுதியற்றவர்களும் தொடர்ந்து பதவியில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை தி.மு.க., எதிர்க்கிறது. ஆனால் தி.மு.க., தலைவர்களின் குழந்தைகள் மற்றும் நிர்வாகிகளின் வாரிசுகள் மூன்று மொழி கல்வி முறையில் படித்து வருகின்றனர். தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இது கல்வித் துறையின் மோசமான நிலையை காட்டுகிறது. கல்வி கற்றவர்கள் மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல முடியும்.
தமிழ்நாட்டில் பா.ஜ., ஆட்சி வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமை தொகை வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும். அதற்கு கர்மவீரர் காமராஜர் பள்ளிகள் என பெயர் வைக்கப்படும்.
கல்வி மற்றும் மருத்துவ துறையில் உயர்ந்த தரத்தை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். புளியங்குடி எலுமிச்சை பழத்திற்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதம் வழங்கப்படும். இதன் மூலம் ஏற்றுமதி அதிகரித்து விவசாயிகள் பயன்பெறுவர்.
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.