Paristamil Navigation Paristamil advert login

கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்: சித்தராமையா, ஜெகனுக்கு அழைப்பு

கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்: சித்தராமையா, ஜெகனுக்கு அழைப்பு

13 பங்குனி 2025 வியாழன் 16:31 | பார்வைகள் : 778


தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனை சந்தித்து, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்தார். அதேநேரத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பெங்களூரில் சந்தித்து, தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி அழைப்பு விடுத்தார்.

மக்கள்தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், தற்போது உள்ள லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்புக் கொடி துாக்கி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் கூட்டி, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக குரல் எழுப்ப செய்தார். அதன் தொடர்ச்சியாக, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய மாநில தலைவர்களையும், முதல்வர்களையும் அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, வரும் 22ம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு, 7 மாநிலங்களின் முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அவர் அழைப்பு கடிதம் எழுதியுள்ளார்.

அதையடுத்து, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்தசரண் தாஸ் ஆகியோரை, புவனேஸ்வரில் நேற்று முன்தினம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி., ஆகியோர் சந்தித்து, அழைப்பு விடுத்தனர்.

விஜயவாடாவில் நேற்று, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோரை சந்தித்து, அமைச்சர் எ.வ.வேலு, ராஜ்யசபா எம்.பி., வில்சன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.


பெங்களூர் சென்றுள்ள அமைச்சர் பொன்முடி, தி.மு.க., - எம்.பி., அப்துல்லா ஆகியோர் நேற்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து, சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

முயற்சி திருவினையாக்கும்

சென்னை விமான நிலையத்தில், அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி:


லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும். அந்த மாநிலங்களில் உள்ள தலைவர்களை ஒருங்கிணைத்து, வரும் 22ம் தேதி சென்னையில் கூட்டம் நடத்தி, பிரதமருக்கு எங்கள் கோரிக்கையை தெரிவிக்க உள்ளோம்.

ஏற்கனவே, இரண்டு முறை இந்திரா, வாஜ்பாய் ஆட்சி காலங்களில், தொகுதி மறுசீரமைப்பு திட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம்.

முயற்சி திருவினையாக்கும் என, ஒரு முதுமொழி இருக்கிறது. அதன் அடிப்படையில், நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பீஹார், ராஜஸ்தான், உ.பி., ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள்தொகை, தமிழகத்தை காட்டிலும் அதிகம். இதனால், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், நமக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, மறுசீரமைப்பு தற்போது நடத்தப்படாது என, பிரதமர் உறுதி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்