லட்டு
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9478
விநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை செய்ய ஆரம்பித்திருப்பார்கள். விநாயகருக்கு பிடித்த பலகாரங்களில் ஒன்று தான் லட்டு. சிலருக்கு அந்த லட்டு எப்படி செய்வதென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வீட்டிலேயே ஈஸியாக எப்படி லட்டு செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்தால், நிச்சயம் சுவையான லட்டு கிடைக்கும். சரி, இப்போது அந்த லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை பொடி - 1/2 கப்
நெய் - 1/4 கப் + 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 1 கையளவு
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கடலை மாவை சல்லடையில் சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் 1/4 கப் நெய் ஊற்றி சூடேற்றி, பின் அதில் சலித்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து, 6-7 நிமிடம் நன்கு கிளற வேண்டும். பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்து, அதில் சர்க்கரை பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து, மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நன்கு கிளறி, மற்றொரு பௌலில் மாற்ற வேண்டும். அடுத்து கையில் சிறிது நெய் தடவி, கடலை மாவு கலவையை கையால் பிசைய வேண்டும். இறுதியில் அதனை லட்டு போன்று பிடிக்க வேண்டும்.