Paristamil Navigation Paristamil advert login

84 ஊர்களில் 808 பேர் கைது 15,000 லிட்டர் சாராயம், ஊறல்கள் அழிப்பு

84 ஊர்களில் 808 பேர் கைது 15,000 லிட்டர் சாராயம், ஊறல்கள் அழிப்பு

23 ஆனி 2024 ஞாயிறு 03:11 | பார்வைகள் : 375


கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் 84 இடங்களில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 808 பேர், கைதாகியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கலெக்டர் மாற்றப்பட்டார். சாராயம் விற்பனை செய்த நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் போலீசார் மட்டுமின்றி, அந்தந்த பகுதி அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு போலீசார் உடையாளிப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆதனக்கோட்டையைச் சேர்ந்த வீராசாமி, 50, என்பவரை மடக்கி விசாரித்தனர். அவர், 60 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருத்துவக் கல்லுாரி அருகே காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையில் உள்ள நெசக்குளம் பகுதியில், 250 லிட்டர் சாராயம் மற்றும் ஊறலை போலீசார் அழித்தனர்.

கடந்த இரண்டு நாட்களில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 84 இடங்களில் போலீசார் சோதனை நடத்திஉள்ளனர்.

அதில், 876 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 808 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 3,000 லிட்டர் சாராயம்; 12,000 லிட்டர் ஊறல் என, 15,000 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுஉள்ளது.


போலீசார் கூறியதாவது:


அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில், அதிகளவு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு பாக்கெட் 60 ரூபாய் என்ற குறைந்த விலையில் கிடைப்பதால், கள்ளச்சாராயத்தை அதிகம் பேர் குடிக்கின்றனர்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தொடர்ந்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சாராயம் குடித்ததாக மருத்துவமனைக்கு வருவோரின் வாயிலாகவும், விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னையில் இருந்து

மெத்தனால் விற்பனை?தமிழகத்தில் இருவேறு விதமான கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அதில், காய்ச்சப்படும் சாராயம் ஒருபுறம் இருந்தாலும், 1 லிட்டர் மெத்தனாலில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில், புதுச்சேரியில் இருந்து வாங்கப்பட்ட மெத்தனால் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தமி ழக அரசு அறிவித்தது. அதேநேரம், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்துக்கு, சென்னையில் இருந்து மெத்தனால் வாங்கப்படுவது, போலீசாரின் விசாரணை யில் தெரிய வந்து உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்