Paristamil Navigation Paristamil advert login

தமிழக அரசின் மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும் உத்தரவிட்டனர்

தமிழக அரசின் மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும் உத்தரவிட்டனர்

11 கார்த்திகை 2023 சனி 11:57 | பார்வைகள் : 2022


பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அம்மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும், அரசு  இயற்றும் சட்ட மசோதாக்களுக்கு, ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கிறார் என்றும் கூறி, அவருக்கு எதிராக, அம்மாநில அரசு உச்ச  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது; 

தமிழக அரசும், கவர்னர் ரவிக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. இந்த இரு மனுக்களும் நேற்று  விசாரணைக்கு வந்தபோது, 'இந்த விவகாரம் மிகவும் கவலைக்குரியது' என, தெரிவித்த நீதிபதிகள், 'நெருப்புடன் விளையாடுகிறீர்கள்' என, பஞ்சாப் கவர்னரை எச்சரித்தனர். மேலும், தமிழக அரசின் மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும்  உத்தரவிட்டனர்.

தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியது. 

துஷ்பிரயோகம்

கவர்னர் ரவிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் அரசியல் எதிரியாக, கவர்னர் ரவி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். 

சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார். கவர்னரின் இந்த அதிகார துஷ்பிரயோகம், அரசியலமைப்புக்கு முரணானது.

கவர்னரின் இந்த செயலற்ற தன்மை, நிராகரிப்பு மனப்பான்மை, தாமதம் மற்றும் கடமை செய்ய தவறுதல் உள்ளிட்ட செயல்கள், சட்ட விரோதமானவை மற்றும் தன்னிச்சையானவை என, இந்த நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.

ஸ்தம்பித்துள்ளது

மசோதாக்கள் மட்டுமின்றி, சிறை கைதிகளுக்கான தண்டனை குறைப்பு, தினசரி கோப்புகள், பணி நியமன ஆணை, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு தொடர ஒப்புதல் வழங்குவது உட்பட பல்வேறு கோப்புகளில், அவர் கையெழுத்திடவில்லை. 

இதனால்,  ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.   எனவே,

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது, கவர்னர் முடிவெடுக்க இந்த நீதிமன்றம்,  காலவரையறையை நிர்ணயிக்க வேண்டும். 

மேலும், கவர்னர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள், கோப்புகள், அரசு ஆணைகள் உள்ளிட்டவற்றின் மீது, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிவு தெரிவிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டு உள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ''கடந்த 2020, 2021, 2022ல் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவு அறிவிக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார். பஞ்சாப் முதல் கன்னியாகுமரி வரை, இந்த நோய் வேகமாக பரவி வருகிறது,'' என்றார்.

அதன் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சட்டப்பிரிவு 200ன் கீழ், கவர்னரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 12 மசோதாக்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளிட்ட பிற விஷயங்கள், சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது, அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கான நியமனங்கள் உள்ளிட்டவற்றில், 54 கோப்புகள் நிலுவையில் உள்ளன.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடத்தில், நான்கு உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருவதையும், இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.

இந்த கோரிக்கைகள் அனைத்துமே, தீவிர கவலைக்குரிய விஷயங்கள். இதை மனதில் வைத்து, இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல், இந்த நீதிமன்றத்துக்கு உதவும்படி கோரிக்கை வைக்கிறோம். விசாரணை, வரும் 24க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பஞ்சாபிலும்...

முதல்வர் பகவந்த் சிங் மன் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள பஞ்சாபில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.இந்த மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச் 3 முதல் 22 வரை நடந்தது. அப்போது முதலே, கவர்னருக்கும் அரசுக்கும் இடையே, கடும் மோதல் வலுக்க துவங்கியது.

இந்நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தின் நீட்டிக்கப்பட்ட இரண்டு நாள் கூட்டத் தொடர், ஜூன் மாதமும், மற்றொரு கூட்டத் தொடர் அக்., 20 மற்றும் 21ம் தேதிகளிலும் நடந்தது. 

நீட்டிக்கப்பட்ட இரு கூட்டத் தொடர்களும் சட்டவிரோதமானவை, அரசியலமைப்புக்கு எதிரானவை' என, கவர்னர் குற்றஞ்சாட்டினார். 

இதை அடிப்படையாக வைத்து, ஜூன் மாதம் நடந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு, கவர்னர் அனுமதி அளிக்கவில்லை.இதையடுத்து, அந்த இரு கூட்டத் தொடர்களும் சட்டப்பூர்வமானவை என அறிவிக்க கோரி, பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

கடந்த ஜூன் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரின் செல்லுபடியாகும் தன்மை குறித்து கவர்னர் சந்தேகம் எழுப்புவதற்கு, அரசியல் சாசன அடிப்படை இல்லை. இதை காரணம் காட்டி, மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுத்துள்ளார்.

சட்டசபை கூட்டத் தொடரின் மீது சந்தேகம் எழுப்பும் எந்த முயற்சியும், ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்துக்களை விளைவிக்கும்.சபையின் சிறப்புரிமைகளின் பாதுகாவலராகவும், அரசியலமைப்பு  அதிகாரியாகவும் அங்கீகரிக்கப்பட்ட சபாநாயகர், சபையை ஒத்திவைப்பதில் தன் அதிகார வரம்பிற்குள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

ஜூன் 19 மற்றும் 20ம் தேதிகளில், சபை கூட்டப்பட்டது, அலுவல் மற்றும் நடத்தை விதிகளின் வரம்பிற்கு உட்பட்டது. இதில் கவர்னர் தலையிட முடியாது. 

ஜனநாயக நாட்டில் உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே உள்ளது. அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி கவர்னர் செயல்படுகிறார். இது தான் அவர் பின்பற்ற வேண்டிய அடிப்படை கொள்கை.

அப்படி இருக்கையில், இந்த கூட்டத்தொடரை அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி, மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். 

பஞ்சாப் அரசுக்கும், கவர்னருக்கு இடையே நடந்து வரும் மோதல், மிகுந்த கவலைக்குரியது. 

நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பூர்வமானது என, இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது, கவர்னர் விரைவில் முடிவு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சட்டசபை தொடரை ஒத்திவைக்காமல், நீட்டித்தது தொடர்பாக பஞ்சாப் அரசுக்கும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்