Paristamil Navigation Paristamil advert login

சென்னை அருகே புயல் சின்னம்: வங்கக்கடலில் 15ல் உருவாகிறது

சென்னை அருகே புயல் சின்னம்: வங்கக்கடலில் 15ல் உருவாகிறது

11 கார்த்திகை 2023 சனி 20:49 | பார்வைகள் : 4981


வங்கக்கடலில், சென்னைக்கு சற்று தொலைவில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். கிழக்கு திசை காற்றிலும் வேக மாறுபாடு நிலவுகிறது.

இதனால், தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், இன்று பகல் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று முதல், 15ம் தேதி வரை, தமிழகத்தில் மிதமான மழை தொடரும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அணை பகுதியில், 9 செ.மீ., பெய்துள்ளது.

மாநிலம் முழுதும், 150க்கும் மேற்பட்ட இடங்களில், 1 முதல், 8 செ.மீ., வரை மிதமான மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு, 10 நாட்களாக கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. நேற்றுடன் கனமழை எச்சரிக்கை 'வாபஸ்' பெறப்பட்டுள்ளது.

அதேநேரம், வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயல் சின்னமாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது, படிப்படியாக வட மேற்கில் நகர்ந்து, ஆந்திரா அருகே காற்றழுத்த மண்டலமாக மாறி, பின் புயலாக உருவாகி, ஆந்திராவில் கரை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்