காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அவலம்
13 கார்த்திகை 2023 திங்கள் 08:08 | பார்வைகள் : 3374
காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புதிதாக பிறந்த மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது என பிபிசிக்கு தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக பிறந்த குழந்தைகளிற்கான தீவிரகிசிச்சை பிரிவில் மின்சாரம் செயல் இழந்துள்ளதால் 37 குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது.
இந்த குழந்தைகளை இருதயசத்திரசிகிச்சை பிரிவிற்கு மாற்றியுள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த குழந்தைகளின் படங்களை மருத்துவமனை வட்டாரங்கள் பிபிசிக்கு அனுப்பிவைத்துள்ளன.
இந்த குழந்தைகள் அனைவரையும் இழக்கப்போகின்றோம் என அஞ்சுகின்றேன் என சத்திரகிசிச்சை பிரிவின் தலைவரான வைத்தியர் மர்வன் அபு சடா தெரிவித்துள்ளார்.
இதேவேளை காசாவின் பிரதான மருத்துவமனையில் நிலைமை மிகமோசமானதாக ஆபத்தானதாக காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் முற்றுமுழுதாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது உணவும் தண்ணீரும் இல்லாத நிலை காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையை சுற்றி தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகங்களையும் குண்டுவீச்சினையும் செவிமடுக்க முடிவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அல்ஸிபா தற்போது ஒரு மருத்துவமனையாக இயங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.