Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம்

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம்

13 கார்த்திகை 2023 திங்கள் 09:33 | பார்வைகள் : 2831


இலங்கையின் 78ஆவது வரவு - செலவு திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வரவு - செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான 10ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு மாத்திரமே கவர்ச்சிகரமான அறிவிப்பாக இருந்தது.

அதற்கு அப்பால் பொருளாதார ரீதியாக நாட்டை முன்னேற்றும் பல்வேறு முன்மொழிவுகள் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டது.

அவை வருமாறு,

வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் - ஜனாதிபதி முன்மொழிவு
யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு- செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

அதற்கான பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. அவற்றில் மக்களை மீள குடியேற்ற இதற்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு
13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் உயர்தரம் பயிலும் அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொள்ள முடியும்.

4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

உள்ளூர், வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர இது சிறந்த வழியாகவும் அமையும்.

'சுரக்ஷா' மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்
அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முந்தைய ஆண்டுகளில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்ட பணத்தின் 3 மடங்கு 2024 ஆம் ஆண்டின் நிவாரணத்திற்காக செலவிடப்படும்.

ஊனமுற்ற நபர்கள், CKDU நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நன்மை திட்டங்களுக்கு 205 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் 30 பில்லியன் ரூபாய் கடன் வசதி.

நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் 'சுரக்ஷா' மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு

கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை
2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

நிலம் மற்றும் வீட்டு உரிமைகள் முழுமையாக மக்களுக்கே வழங்கப்படுகின்றன. இந்த முறைப்படி இந்நாட்டு மக்கள் தொகையில் எழுபது வீதமானோர் காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களாக மாறுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நகர்ப்புற வீடுகளுக்கு வாடகை பெறுவது நிறுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அந்த வீடுகளின் உரிமை குடியிருப்போருக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஓய்வூதியகாரர்களுக்கு கொடுப்பனவு 2,500 ரூபாவாக அதிகரிப்பு ; முதியோர் கொடுப்பனவு 3,000/- ரூபாவாக அதிகரிப்பு
முதியோர் கொடுப்பனவு 1000 ரூபாயில் இருந்து 3,000/- ரூபாயாக அதிகரிக்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 10ஆயிரம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ரூபாய்வரை அதிகரிக்கப்படும்.

பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

தோட்ட மக்களுக்கு காணி உரிமை - 4 பில்லியன் ஒதுக்கீடு
பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பு ஜனாதிபதி அறிவிப்பு
இது தேர்தல் வரவு - செலவு திட்டம் என்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதிகளவான சலுகைகள் இந்த வரவு - செலவு திட்டம் வழங்கப்படும் என்கின்றனர்.

2015ஆண்டுக்கு பின் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வில்லை. அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியன் ஆக உள்ளது.

அவர்களுக்கான வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 7500 ரூபாதான் வழங்கப்படுகிறது. அதனை 17500 ரூபாவாக அதிகரிக்கிறோம். 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த தொகை வழங்கப்படும்.

அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்
அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்