Paristamil Navigation Paristamil advert login

தீபாவளிப் போட்டியில் வென்றது யார் ?

தீபாவளிப் போட்டியில் வென்றது யார் ?

14 கார்த்திகை 2023 செவ்வாய் 07:21 | பார்வைகள் : 4841


2023ம் ஆண்டு தீபாவளிக்கு அதிக வசூலைக் கொடுக்கும் டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. அதற்கடுத்த கட்டத்தில் உள்ள கார்த்தி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்த படங்கள்தான் வெளியாகின. கார்த்தி நடித்த 'ஜப்பான்', ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', விக்ரம் பிரபு நடித்த 'ரெய்டு', காளி வெங்கட் நடித்த 'கிடா' ஆகிய படங்கள் வெளிவந்தன.

இவற்றில் 'கிடா' படத்திற்கு மற்ற படங்களை விடவும் பாராட்டுக்களும், பாசிட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்தன. ஆனால், படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் மிக மிகக் குறைவாக உள்ளனர். 'ரெய்டு' படம் காலை காட்சி வெளியாகாமல் மதியத்திற்கு மேல்தான் படம் வெளியானது. இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பது கூட பலருக்குத் தெரியவில்லை என்பது சோகம்.

கார்த்தி நடித்த 'ஜப்பான்' படம் மீது வெளியீட்டிற்கு முன்பு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், படம் வந்த பின் பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். எதையோ சொல்ல வந்து என்னென்னமோ சொல்லியிருக்கிறார்கள் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் ஒரு சேரச் சொன்னார்கள். முதல் நாள் நல்ல வசூலைக் கொடுத்த படம் அடுத்தடுத்த நாட்களில் குறைந்துவிட்டது என்கிறார்கள்.

ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்து வெளிவந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு விமர்சனங்கள் சுமாராகக் கிடைத்தாலும் படம் என்டர்டெயின்மென்ட் ஆக இருக்கிறது என்ற ரசிகர்களின் கருத்து படத்திற்கான வரவேற்பை மாற்றிவிட்டது. கடந்த நான்கு நாட்களில் இப்படம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவலாக உள்ளது. இந்த வருட தீபாவளியில் வசூல் ரீதியாக வெற்றிப் படம் என்ற பெயரை இப்படம் தட்டிச் செல்லும் என்பது இன்றைய நிலவரம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்