சுரங்க பாதையில் சிக்கியவர்களை மீட்க இரும்பு குழாய் அமைக்கும் பணி தீவிரம்
15 கார்த்திகை 2023 புதன் 10:27 | பார்வைகள் : 2750
உத்தரகாசி, உத்தரகண்டில் சுரங்க மலைப்பாதை குடையும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை மீட்க, இடிபாடுகளுக்குள் 3 அடி விட்டம் உள்ள இரும்பு குழாயை நுழைத்து தப்பிக்கும் வழி ஏற்படுத்தும் முயற்சி துரிதகதியில் நடந்து வருகிறது.
பயண துாரம்
உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சார்தாம் எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு முக்கிய ஹிந்து மத வழிபாட்டு தலங்களை இணைக்கும் வகையில் சாலை பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா மற்றும் தண்டல்காவ்ன் இடையே மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டால், உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரிக்கு செல்லும் பயண துாரம், 26 கி.மீ., குறையும்.
கடந்த 12ம் தேதியன்று சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அதன் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள், 40 தொழிலாளர்கள் சிக்கினர்.
அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் வாயிலாக அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கவலைப்பட வேண்டாம்
சுரங்கப்பாதையின் சில்க்யாரா நுழைவு பகுதி யில் இருந்து, 600 அடி துாரத்தில், 120 அடிக்கு சுரங்கம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ள கப்பார் சிங் நெகி என்பவருடன், அவரது மகன் ஆகாஷ் சிங் நெகியை, 'வாக்கி டாக்கி' வாயிலாக அதிகாரிகள் பேச வைத்தனர்.
அப்போது, அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கப்பார் சிங் தெரிவித்தார்.
இடிந்து விழுந்துள்ள சுரங்க இடிபாடுகளுக்குள், 3 அடி விட்டம் உடைய இரும்பு குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே நுழைத்து, சிக்கியுள்ள 40 தொழிலாளர்கள் தப்பிக்க வழி ஏற்படுத்தும் முயற்சி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதற்காக பிரத்யேக இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த குழாய் நுழைக்கும் பணியை பார்வையிட, நீர்ப்பாசனத்துறையில் இருந்து நிபுணர் குழு சம்பவ இடத்துக்கு வந்துள்ளது.
மீட்புப்பணி நடக்கும் இடத்தில், ஆறு படுக்கை வசதி உடைய தற்காலிக மருத்துவமனையும், 10 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.