நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும் அன்றாட பழக்கங்கள்
16 கார்த்திகை 2023 வியாழன் 02:12 | பார்வைகள் : 2751
அடிக்கடி ஞாபக மறதியால் அவதிப்படுகிறீர்களா? சின்ன விஷயம் கூட சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறதா? மற்ற வேலைகளுக்கு மத்தியில் திட்டமிட்ட விஷயம் தாமதமாக நினைவுக்கு வருகிறதா? இல்லை மறந்து விடுகிறீர்களா? இதுபோன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்த்தால் மூளையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.
சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மூளையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவை மூளையின் செயல்பாடுகளை பாதிப்புக்குள்ளாகி நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுத்துவிடும்.
தூக்கமின்மை:
மூளையின் ஆரோக்கியத்திற்கும், சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் தூக்கம் அவசியமானது. போதுமான தூக்கம் வரவில்லை என்றால் மூளை சரியாக செயல்படாது. அதனால் நினைவாற்றல் இழப்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை தவிர்க்க இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்குங்கள்.
உணவுக்கட்டுப்பாடு:
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை கலந்த பானங்கள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கொண்ட உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது மூளையை சேதப்படுத்தும். நினைவாற்றல் திறனை சீர்குலைக்கும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
புகைப்பழக்கம்:
மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மோசமான விஷயங்களில் ஒன்று, புகைப்பழக்கம். புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது ரத்த நாளங்களை சேதப்படுத்தும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கும். இது நினைவாற்றல் இழப்பு மற்றும் பிற அறிவாற்றல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
மது அருந்துதல்:
அதிக அளவில் மது அருந்துவது மூளை செல்களை சேதப்படுத்தி நினைவாற்றலை பாதிக்கும். ஆல்கஹால் தூக்கத்தில் குறுக்கீடு செய்து, நினைவக கட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும்.
மன அழுத்தம்:
நாள்பட்ட மன அழுத்தம் மூளையின் நினைவகத்திற்கு முக்கிய பொறுப்பு வகிக்கும் ஹிப்போகாம்பஸை சேதப்படுத்தும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். நினைவாற்றலையும் பாதிக்கும். அதனால் மனஅழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்திருங்கள்.
தனிமை:
மற்றவர்களுடன் தொடர்பில் இல்லாமல் தனிமை வாழ்க்கை வாழ்வதும் மூளை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். மனச்சோர்வை அதிகரிக்கச்செய்து நினைவாற்றல் திறனை குறைத்துவிடும். மூளை ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தேவையான தூண்டுதலையும் இழக்க நேரிடும். அதனால் தனிமை வாழ்க்கை முறையை தவிர்த்திடுங்கள்.
சோம்பேறி வாழ்க்கை முறை:
நீண்ட காலமாக உடற்பயிற்சியிலோ அல்லது வேறு எந்த உடல் செயல்பாடுகளிலோ ஈடுபடாமல் இருந்தால் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நினைவாற்றல் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். ஏனெனில் உடல் செயல் இழந்தால், மூளையையும் பலவீனமாக்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சிறு சிறு உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்ளுங்கள்.