2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு தோல்விதான்! மத்திய இணையமைச்சர் முருகன்
16 கார்த்திகை 2023 வியாழன் 06:59 | பார்வைகள் : 2836
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள்,'' என, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில், மத்திய அரசின் 112 கோடி ரூபாய் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமான பணியை, மத்திய இணையமைச்சர் முருகன், நேற்று (நவ.,15) பார்வையிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:
பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணி, 97 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது, ஆங்காங்கே கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, 2024 ஜன., 1 முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நல்ல அரசு என்றால், மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி ஆகியவற்றை கட்டி சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, தி.மு.க., அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. வரும் 2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க., அரசுக்கு, மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள்.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் சாலை வசதிகள் அறவே இல்லை. பல இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதால், பொதுமக்கள் வாகனங்களில் செல்ல பெரும் சிரமப்படுகின்றனர். தி.மு.க., அரசு வெறும் வாய் சவடால் அரசாக உள்ளது; ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை,'' என்றார்.