கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம்
16 கார்த்திகை 2023 வியாழன் 11:49 | பார்வைகள் : 3652
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடி ரூபாய் பெறுமதியான 16 தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இந்த பயணி வந்திறங்கிய விமானத்திற்குள் சுங்க அதிகாரிகள் நுழைந்து அவரை, வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளனர்.
இவர், கொழும்பு-02 கொம்பனித் தெருவில் வசிக்கும் 32 வயதுடையவர் என்று அறியமுடிகின்றது.
இவர், வியாழக்கிழமை (16) அதிகாலை 01.40 மணியளவில் டுபாயிலிருந்து Fly Dubai Airlines இன் FZ-569 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் வந்த விமானத்திற்குள் பிரவேசித்த கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த பயணியை கைது செய்ததுடன், அவரது பயணப் பொதிகளை கைப்பற்றினர்.
06 கிலோ 423 கிராம் 9 மில்லிகிராம் எடையுள்ள தங்க ஜெல், அவரது சூட்கேஸில் 16 கெப்ஸ்யூல் களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது, இந்த தங்க ஜெல் கையிருப்பு அரசு இரசாயன பகுப்பாய்வாளருக்கு ஆய்வு அறிக்கையைப் பெற அனுப்பப்பட்டுள்ளது, மேலும் அவரது கையடக்கத் தொலைபேசி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெறவும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த அறிக்கைகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கும் வரை அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.