மின் துண்டிப்பைச் சந்தித்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும்! - மின்சார வாரியம் உறுதி!!
16 கார்த்திகை 2023 வியாழன் 16:31 | பார்வைகள் : 3514
சியாரா புயலினால் (Tempête Ciaran) மின் துண்டிப்பைச் சந்தித்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என மின்சார வழங்குனர்களான Enedis நிறுவனம் அறிவித்துள்ளது.
பதினைந்து நாட்களுக்கு முன்னர் சியாரா புயல் வீசி பெரும் சேதத்தினை ஏற்படுத்தியிருந்தது. 780,000 வீடுகளுக்கு மின் இணைப்பு தடைப்பட்டிருந்தது. மின் இணைப்பு சீர் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் மோசமான வானிலை காரணமாக தற்போது வரை முற்று முழுதாக மின்சாரம் வழங்கப்பட முடியவில்லை. இன்று காலை நிலவரப்படி Brittany இல் 2,300 வீடுகளுக்கு மின் இணைப்பு மீள வழங்கப்படவில்லை.
திருத்தப்பணிகள் தொடர்பில் Enedis நிறுவனதின் இயக்குனர் Jean-Philippe Lamarcade தெரிவிக்கையில், "நாங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகள் அச்சுறுத்தலானவை. சேறு, நீர், முழு காடுகளும் என நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. சில இடங்களில் எங்கள் இயந்திரங்களை கொண்டுசெல்ல முடியவில்லை!" என தெரிவித்தார்.
அதேவேளை, எவ்வாறாயினும் ஐந்து மணிநேரத்துக்கு மேல் மின் தடையை சந்தித்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.