புதுடில்லியில் அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்கள் குழு அதிரடி கைது
17 கார்த்திகை 2023 வெள்ளி 06:36 | பார்வைகள் : 3009
புதுடில்லியில் போலி டாக்டர்கள் செய்த அறுவை சிகிச்சையால், நோயாளிகள் இருவர் பலியான நிலையில், இரண்டு டாக்டர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடில்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில், அகர்வால் என்ற டாக்டருக்கு சொந்த மான அகர்வால் மருத்துவமனை இயங்கி வந்தது. இங்கு, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த மருத்துவமனை மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், பித்தப்பை சிகிச்சைக்காக அஸ்கர் அலி என்பவர் கடந்த ஆண்டு இறுதியில் இங்கு சேர்க்கப்பட்டார்.
சில மாதங்களாக இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, டாக்டர் ஜஸ்ப்ரீத் இந்த அறுவை சிகிச்சையை செய்வார் என கூறப்பட்டது.
ஆனால், டாக்டர் ஜஸ்ப்ரீத்துக்கு பதிலாக டாக்டர் அகர்வாலின் மனைவி பூஜா மற்றும் மஹேந்திரா ஆகியோர் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் டாக்டராக இல்லாத நிலையில், இந்த விபரீத செயலில் ஈடுபட்டதால், கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்ட அஸ்கர் அலி, வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.
இதேபோல், மற்றொரு நபருக்கும், டாக்டர் அல்லாதவர்கள் செய்த அறுவை சிகிச்சையால் அவர் உயிரிழந்தார். பலியானவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், டாக்டர் அகர்வாலின் மனைவி பூஜா, முன்னாள் லேப் டெக்னீசியன் மஹேந்திரா ஆகியோர், டாக்டருக்கு படிக்காமலேயே அறுவை சிகிச்சை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவர் மட்டுமின்றி, போலி அறுவை சிகிச்சைக்கு உடந்தையாக இருந்த டாக்டர்கள் அகர்வால், ஜஸ்ப்ரீத் ஆகியோரையும் கைது செய்தனர்.
டாக்டர் அகர்வாலின் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்துகள், ஊசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.