Paristamil Navigation Paristamil advert login

2024ல் தமிழகத்தில் ஆச்சரியம் நிகழும்: பா.ஜ., ரகசிய ஆய்வில் புது தகவல்

2024ல் தமிழகத்தில் ஆச்சரியம் நிகழும்: பா.ஜ., ரகசிய ஆய்வில் புது தகவல்

17 கார்த்திகை 2023 வெள்ளி 08:48 | பார்வைகள் : 3174


அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தல், நாடு முழுதும் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகம் உட்பட தென் மாநிலங்களை இந்த தேர்தல் புரட்டி போடும். 'குறிப்பாக தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியான, ஆச்சரியமான மாற்றம் ஏற்படும்' என, பா.ஜ., நடத்தியுள்ள ரகசிய ஆய்வில் தெரியவந்துஉள்ளது.

அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, மத்தியில் ஆளும் பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ளது.

நாடு முழுதும் உள்ள அரசியல் நிலவரம் தொடர்பாக, பா.ஜ., அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதன்படி சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல புதிய தகவல்கள் பா.ஜ., தலைமைக்கு கிடைத்து உள்ளது. குறிப்பாக, பா.ஜ., அல்லது அதன் கூட்டணி ஆட்சி இல்லாத தென் மாநிலங்கள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் இந்த தென் மாநிலங்களில் ஏற்படும் முடிவுகளால், தேசிய அளவில் ஆட்சி அமைப்பதில் எந்த தாக்கமும் இருக்காது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த மாநிலங்களில் எந்த ஒரு கட்சிக்கும் முழு வெற்றி கிடைக்காது என்பதும் தெரியவந்துள்ளது.

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், 130 தொகுதிகள் இருந்தாலும், அது தேசிய அளவில் புதிய ஆட்சி அமைவதில் எந்த தாக்கத்தையும், மாற்றத்தையும் இவற்றால் ஏற்படுத்த முடியாது.

தென் மாநிலங்களில், எட்டு முக்கிய கட்சிகள் கோலோச்சி வருகின்றன. காங்கிரசோ, பா.ஜ.,வோ இங்கு மொத்த தொகுதிகளையும் அள்ள முடியாது. அதுபோல, மாநிலங்களுக்கு இடையேயும், அரசியல் ரீதியில் எந்த தொடர்பும் இல்லை. ஒரு மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் கட்சி, மற்றொரு மாநிலத்தில் இருக்கும் இடமே தெரியாது.

தமிழகம் 

ஆந்திரா மற்றும் தமிழக அரசியல், ஆன்மிகம் மற்றும் சினிமாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவை. இதனால் திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு எப்போதும் வரவேற்பு உள்ளது.

புதுச்சேரியையும் சேர்த்து, 40 லோக்சபா தொகுதிகள் உள்ள தமிழகத்தில், வரும் தேர்தல் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகியவையே மாறி மாறி வெற்றி பெற்று வந்தது, இந்தத் தேர்தலில் மாறும். திராவிட இயக்கம் குறித்து பேசப்பட்டாலும், அந்த சித்தாந்தம் மங்கி வருகிறது.

வரும் தேர்தலில் மூன்று முக்கிய முகங்கள், அரசியலை நிர்ணயிப்பவர்களாக மாறுவர். ஒருவர், பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை. மற்றவர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் பிரபல நடிகர் விஜய். இவர்கள், முதல் முறையாக அல்லது இரண்டாவது முறையாக ஓட்டளிக்கும் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பர்.

இந்த வகையில், திராவிட கட்சிகளிடமிருந்து, 25 முதல் 30 சதவீத ஓட்டுகளை இவர்கள் பிரிப்பர். இது இந்தத் தேர்தலில் முழுமையாக நடக்காவிட்டாலும், 2026 சட்டசபை தேர்தலில் நிச்சயம் நடக்கும்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களின் இடம், தற்போதும் காலியாக உள்ளது. இதை நிரப்பப் போவது யார் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவு செய்யும். பா.ஜ.,வுடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு துாது விட்டு வருகிறது. ஆனால், அந்தக் கூட்டணி உருவாவதற்கு வாய்ப்பு இல்லை. தற்போது நடக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பின், வாய்ப்பு இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

ஆந்திரா - தெலுங்கானா

ஆந்திர அரசியலும் சுவாரசியமானது. பா.ஜ.,வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே போட்டி இருந்தாலும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., முக்கியமானதாக இருக்கும். ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை சமீபத்தில் கைது செய்து, சரியான நேரத்தில் சரியான காயை ஜெகன்மோகன் ரெட்டி நகர்த்திஉள்ளார்.

இதனால், பா.ஜ.,விடமும், பிரதமர் மோடியிடமும் சரணடையும் நிலைக்கு சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். இங்கு காங்கிரஸ் ஒரு பொருட்டாகவே பார்க்கப் படுவதில்லை. அதே நேரத்தில் தெலுங்கானாவில், காங்கிரசுக்கு ஓரளவுக்கு இருப்பு உள்ளது.

அந்த இடத்தைக் கைப்பற்றுவதுடன், ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவின் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இதற்காக பல முக்கிய தலைவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆந்திராவில் 25, தெலுங்கானாவில், 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. வரும் தேர்தலில் எந்தக் கட்சியும் அனைத்து தொகுதிகளையும் வெல்ல முடியாது.

கேரளா 

தேசிய அளவில், 'இண்டியா' கூட்டணியில் இருந்தாலும், இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் பரமவைரிகளாக உள்ளன. காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் நோக்கத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், பா.ஜ.,வுக்கு இங்கு இடம் கிடைக்குமா என்றால், சந்தேகமே என்பதே பதிலாக வரும்.

கர்நாடகா 

மொத்தம், 28 தொகுதிகள் உள்ள கர்நாடகா, காங்கிரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வரும் தேர்தலில், முதல்வர் சித்தராமையா முக்கியத்துவம் பெறுவாரா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது. கட்சியில் அந்தளவுக்கு குழப்பங்கள் உள்ளன. காங்கிரசை பின்னுக்கு தள்ளும் முயற்சியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஈடுபட்டுஉள்ளது. மிகவும் சரியாக திட்டமிட்டு, பா.ஜ.,வுடன் அது கூட்டணி அமைத்துள்ளது. இதனால், இங்கு குழப்பமான முடிவுகளே ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வுகளை பார்க்கும்போது, அடுத்த, 10 ஆண்டுகளில், தென் மாநிலங்களில் தன்னை விரிவுபடுத்துக் கொள்ளும் ஒரே தேசிய கட்சியாக பா.ஜ., இருக்கும் என, அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்