இலங்கைக்கு சீன கப்பல்: இந்தியாவை வேவு பார்க்கவா?
17 கார்த்திகை 2023 வெள்ளி 10:58 | பார்வைகள் : 3137
இலங்கை கடல் பகுதிக்கு வெளியே, இந்திய பெருங்கடலில் நிற்கும் சீன உளவுக் கப்பல், 'ஷின் யான் - 6' மீண்டும் கொழும்பு செல்ல காத்திருக்கிறது.
அக்கப்பல், சீனாவுக்கே திரும்பாத நிலையில், அடுத்ததாக, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட, 'ஷியான் யாங் ஹாங் - -03' என்ற பல்நோக்கு கப்பலை இலங்கைக்கு அனுப்ப, அந்நாட்டிடம் அனுமதி கோரியிருக்கிறது சீனா.
சீனாவின் இயற்கை வள அமைச்சகத்துக்கு சொந்த மான அந்தக் கப்பல், இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்ந்து, இலங்கைக்கு உதவுவதற்காகவே அனுப்புவதாக காரணம் சொல்லப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு
அடுத்த ஆண்டு ஜன., 5ல் இருந்து பிப்., 20 வரை, 45 நாட்களுக்கு இலங்கை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிருப்பதாகவும், சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிநவீன ஷியான் யாங் ஹாங் - -03 கப்பல், 99.06 மீட்டர் நீளம் உள்ள பல்நோக்கு கப்பல் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும், சீனாவில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய, 17 கப்பல்கள் இலங்கைக்கு வந்து சென்றிருக்கின்றன.
ஆய்வு என்ற பெயரில், இலங்கை கடல் பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்படும் சீன கப்பல்கள், முழுக்க முழுக்க இந்திய கடல் பகுதிகள் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களை உளவு பார்ப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டவை.
இதை, இந்தியா பல முறை இலங்கை அரசிடம் தெரிவித்து, சீன கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுள்ளது.
ஆனாலும், அதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், இலங்கை கடல் பரப்புக்கு தொடர்ச்சியாக சீன கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தான் ஷியான் யாங் ஹாங் -- 03 கப்பல் இலங்கைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையில், சீனா அதிபர் ஜின் பிங்கின் சிறப்புத் துாதர் ஷென் யிகின், வரும் 18ல் இலங்கை செல்கிறார்; அங்கு 21 வரை தங்கியிருந்து, இலங்கை ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார்.
பின், அங்கிருந்து மாலத்தீவு செல்கிறார். புதிய ஜனாதிபதி மொஹமத் முய்சுவின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றதும், சீனாவுக்கு திரும்புகிறார்.
இதுகுறித்து, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
இலங்கையின் அம்பன்தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, சீன உயர் தொழில்நுட்ப கப்பல்கள் அடிக்கடி வரத் துவங்கி உள்ளன.
அவை இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளையம் குறித்த ஆய்வில் ஈடுபடப் போவதாகச் சொன்னாலும், அக்கப்பல்களின் முழு நேர பணி, இலங்கையில் இருந்தபடியே, இந்தியாவின் தென் கோடியாக இருக்கும் தமிழக கடல் பரப்பு மற்றும் தமிழகத்துக்குள் இருக்கும் இந்திய நிலைகள் குறித்த முழுமையான தகவல்களை கண்காணித்து, விபரங்கள் திரட்டுவது தான்.
அது, இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக அச்சுறுத்தலான விஷயம் என்பதால் தான், இந்திய தரப்பு அதை மிகக் கடுமையாக எதிர்க்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், சீனாவின் பொருளாதார உதவியை தாராளமாக பெற்றுக் கொண்டிருந்த இலங்கை அரசு, சீனாவின் உளவு தந்திரம் குறித்து முழுமையாக அறிய வந்ததும், சீனாவின் ஆதிக்கப் பிடியில் இருந்து வெளியே வர முயற்சிக்கிறது.
ஆனால், பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், இலங்கையால் சீன உறவை முறித்துக் கொள்ள முடியவில்லை.
அழுத்தம்
சீன ஆதிக்கத்தால், அண்டை நாடான இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு இருக்கும் என்பது, தற்போது இலங்கைக்கு எடுத்துச் சொல்லப்பட்டு, அதை இலங்கை முழுமையாக உணர்ந்திருக்கிறது.
தொடர்ந்து இந்திய தரப்பிலும், இலங்கையில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அடுத்த மாதம் இலங்கைக்கு வர இருக்கும் அதிநவீன சீனக் கப்பலால், இந்தியாவுக்கு ஆபத்து என்பதால், அதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் இந்திய தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.