நஹேல் கொலை வழக்கு :காவல்துறை வீரர் விடுவிக்கப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!!
17 கார்த்திகை 2023 வெள்ளி 10:29 | பார்வைகள் : 4484
நஹேல் எனும் இளைஞன் காவல்துறை வீரர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை அறிந்ததே. குறித்த காவல்துறை வீரர் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் விடுவிக்கப்பட்டதகைக் கண்டித்து நஹேலின் தாயார் Mounia ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
”நான் போராடுவேன், என் மகனுக்காக நான் போராட்டத்தைக் கைவிடமாட்டேன்.” என நஹேலின் தயார் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை Nanterre நகரில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. நஹேலின் தயார் நேற்று வெளியிட்ட சிறிய காணொளி ஒன்றில் தனது மகன் கொல்லப்பட்டமைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும், அதில் அனைவரையும் கலந்துகொள்ளும் படியும் கோரியுள்ளார்.
”ஒரு போலீஸ்காரர் ஒரு அரேபிய அல்லது கறுப்பின குழந்தையைக் கொன்று, *கோடீஸ்வரராகி, தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்து விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் இணைகிறாரா..?” என அவர் தனது காணொளி பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நஹேல் எனும் 17 வயது இளைஞன் கடந்த ஜூன் 27 ஆம் திகதி Nanterre நகரில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தப்பிச் செல்ல முற்பட்டதால் காவல்துறை வீரர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தார். அதில் நஹேல் உயிரிழந்தார்.
பின்னர் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை வீரர் ஜூன் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நவம்பர் 15 ஆம் திகதி புதன்கிழமை விடுவிக்கப்பட்டிருந்தார்.
***
*குறித்த காவல்துறை வீரர் சிறைச்சாலையில் இருக்கும் போது, அவரது குடும்பத்தினருக்காக நன்கொடை சேகரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றரை மில்லியன் யூரோக்கள் நன்கொடை சேர்ந்திருந்தது.