மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்: சீமான்
17 கார்த்திகை 2023 வெள்ளி 13:57 | பார்வைகள் : 3719
மாநில அரசுகள் போடும் சட்டத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்றால், நீங்கள் போடும் சட்டத்தை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும் எனக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழை பற்றி பேசினாலே தமிழ் தீவிரவாதம் என்பது எந்த வகையில் நியாயம்? பார்லிமென்ட் கல்வெட்டில் சமஸ்கிருதம், ஹிந்திக்கு இடம் உள்ளபோது, மூத்த மொழியான தமிழுக்கு இடமில்லை
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்ற வேண்டும். மொழி அழிந்தால் இனம் அழியும். பீஹார், ராஜஸ்தானில் ஹிந்தியில் வழக்காடும்போது தமிழகத்தில் தமிழில் வழக்காட முடியவில்லை.
மொழிவாரியாக தான் மாநிலங்கள், இனங்கள் பிரிக்கப்பட்டன; சாதி, மத வழியாக இல்லை. 2006ல் முதல்வராக இருந்த கருணாநிதி தமிழை வழக்காடு மொழியாக்க தீர்மானம் போட்டார். ஆனால் அவரது சட்டத்தை மத்திய அரசு மதிக்கவில்லை.
மாநில அரசுகள் போடும் சட்டத்தை எல்லாம் நாங்கள் மதிக்க தேவையில்லை என்றனர். மாநில அரசுகள் எல்லாம் சேர்ந்ததுதான் மத்திய அரசு. மாநில அரசுகள் போடும் சட்டத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்றால், நீங்கள் போடும் சட்டத்தை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும் எனக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?.
இவ்வாறு சீமான் பேசினார்.